தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள படங்களை ரசிகர்கள் ஜெயிக்க விடாமல் விட்டது இல்லை. ஒரு நல்ல படம் அதற்கான வெற்றியை தானாகவே தேடிக்கொள்ளும் என்பதே மாபெரும் உண்மை. அதற்கு காக்கா முட்டை பார்க்கிங் சித்தா லப்பர் பந்து குட்நைட் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். இப்போது அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் இணைந்திருக்கிறது.
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது. 24 வயதான இளைஞர் அபிஷன் ஜீவிந்த் அவர் இயக்கிய முதல் படத்திலேயே வெற்றி முத்திரை பதித்திருக்கிறார். இந்த படம் உலகளவில் 90 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும், தமிழ் நாட்டில் மட்டுமே 60 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் தந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்த நடிகர்கள் சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டினார்கள். அப்போது வாய்ப்பிருந்தால் எனக்கும் ஒரு கதை செய்யுங்கள் என்று அவரிடம் கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்தும் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
தெலுங்கில் பிரமாண்ட இயக்குனராக பான் இந்தியா படங்களை தந்து வரும் இயக்குனர் ராஜமௌலி, டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்துவிட்டு இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை பாராட்டி பதிவு வெளியிட்டு இருந்தார். இப்போது தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நானி, இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். எனக்கான ஒரு கதையை ரெடி செய்யுங்க, இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே கடந்த 2ம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் கிடைத்த அதே வரவேற்பும் ஆதரவும் ஓடிடி தளத்திலும் தொடர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் மற்றொரு தரமான சம்பவமும் நடந்துள்ளது. அதாவது ஓடிடி தளத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியான பிறகும் இன்னும் தமிழ்நாட்டில் 85 தியேட்டர்களில் இந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய் நடித்த தி கோட் படம் கடந்த ஆண்டில் வெளியான பிறகு 4 வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தி கோட் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது அதே பாணியில், ஓடிடியில் டூரிஸ்ட் ஃபேமிலி ரிலீஸ் ஆன போதிலும் தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





