சென்னையில் நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன் கூறியதாவது, தமிழ் சினிமாவில் பல சங்கங்களுக்கு சொந்தமாக கட்டிடம் இருக்கிறது.
ஆனால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் இல்லை. அரசு நிலம் கொடுத்தால் நாங்களே கட்டிக் கொள்வோம். அதேபோல 10 ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. அதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அடுத்து நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகி டி சிவா பேசுகையில், முதலில் பொது இடத்தில் படபிடிப்பு நடத்தினால் டிராபிக் போலீஸ் ரோந்து வாகனத்திற்கு கட்டிங் கொடுக்க வேண்டும். பலர் பஞ்சாயத்து செய்வார்கள். இப்போது நான் படப்பிடிப்பில் இருந்து வருகிறேன்.
இப்போது யாரும் சினிமா ஷூட்டிங் நடக்கும் இடங்களில் முன்பு போல் கட்டிங் கேட்கவில்லை. லோக்கல் எம்எல்ஏ ஸ்பாட்டுக்கு வந்து யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டாம். ஏதாவது உதவி என்றால் என்னிடம் கேளுங்கள் என்கிறார். இப்போது சினிமா மாறிவிட்டது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பெப்ஸி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியதாவது, ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சினிமா பிஸினஸ் இருக்கிறது. அதில் 500 கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி கட்டுகிறோம். அதில் சில கோடிகளை தான் அரசு மானியமாக தருகிறது. இத்தனை ஆண்டுகளில் பெப்சி தொழிலாளர்களுக்கு நிலம் மட்டுமே அரசு கொடுத்துள்ளது என்றார்.
கடைசியில் பேசிய தமிழக அமைச்சர் ராஜ்குமார் கூறுகையில், நிகழ்ச்சி தொகுப்பாளராக பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறேன். உக்கார இடமில்லாமல் பலித்திருக்கிறேன். இன்று இந்த துறைக்கு என்னை அமைச்சர் ஆக்கி இருக்கிறார் முதல்வர். அவரது அனுமதியுடன் பல திட்டங்களை செய்ய உள்ளோம். விரைவில் மானியம் வழங்கப்படும். அதை முதல்வர் சொல்லிவிட்டார் என்று கூறினார்.





