தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். இப்போது விண்வெளி நாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். கமல்ஹாசனின் நடிப்பு திறமைக்கும் அவரது அயராத உழைப்புக்கும் 70 வயதிலும் அவரது தீராத ஆர்வத்துக்கும் விடாமுயற்சிக்கும் எத்தனை பட்டங்களை கொடுத்தாலும் அவரால்தான் அந்த பட்டங்களுக்கு பெருமையே தவிர அவருக்கு அல்ல.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் மீது பல விமர்சனங்கள், சர்ச்சைகள் இருக்கின்றன. அது கடந்து அரசியல் களத்தில் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக கமல்ஹாசன் களப்பணி செய்து வருகிறார். அது குறித்த பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்து வருகின்றன. விரைவில் திமுக ஆதரவில் ராஜ்ய சபா எம்பி ஆக உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை சார்ந்த கமல்ஹாசன் பல விமர்சனங்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும் ஒரு திரைப்பட கலைஞராக கமல்ஹாசன் செய்த சாதனைகளும் தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு கொண்டு சென்ற அவரது உழைப்பும் ஒரு தொழில்நுட்ப கலைஞனாக தனது படங்களில் அவர் கொண்டு வந்த புதிய தொழில்நுட்பங்களும் அசாத்தியமானவை.
உலக தரத்துக்கு தமிழ் சினிமா இருக்க வேண்டும் என்பதில் தீராத தாகம் கொண்ட கமல்ஹாசன், இப்போது உள்ள எந்த தொழில் நுட்ப வசதிகளுமே இல்லாத 30 35 ஆண்டுகளுக்கு முன்பே பல தொழில்நுட்பங்களை தனது படங்களில் கொண்டு வந்தவர். அதுவும் அவர் தயாரித்த படங்களில் இந்த விஷயங்களை தவறாமல் புகுத்தியவர். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு அற்புதமான நடிப்பு கலைஞர் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, என்னை பிறவி நடிகர் என்று சிலர் சொல்கின்றனர். பிறவி ஏழை என்று ஒன்று உண்டா? பர்மனென்ட் ஏழை என்று ஒன்று உண்டா? இதில் தன்முனைப்பு என்று இருக்கிறது. என் அப்பா மாதிரி ஒரு அப்பா வாய்க்காமல் என் குடும்பம் மாதிரி ஒரு குடும்பம் வாய்க்காமல் இருந்திருந்தால் இந்த நான் இல்லை.
எங்காவது ஒரு கோர்ட்டில் குமாஸ்தாவாக இருப்பேன், கிளார்க் ஆக இருந்திருப்பேன். அதுக்கு மேல இன்ஸ்ட்ரஸ்ட் இல்லாத ஒரு தொழிலில் முன்னேற முடியாது. எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாங்க முதலில். என்னை முதலில் தூக்கி வைத்துக்கொண்ட கலைத்தாய் யாரென்றால் அது என் தாய் தான் என்று நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





