நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 25வது படம். அதே போல் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் மதராஸி. அந்த படமும் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது.
சமீபத்தில் இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்தில் மதராஸி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 15 நாட்களாக இரவு நேரங்களில் இந்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. புயல் மழை என பலதரப்பட்ட இயற்கை இடையூறுகள் ஏற்பட்ட நிலையிலும் படக்குழு உறுதியான நின்று பல்வேறு சிரமங்களை பொருட்படுத்தாமல் ஷூட்டிங்கை வெற்றிக்கரமாக முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி மற்றும் மதராஸி என 2 படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி மதராஸி படம் ரிலீஸாக உள்ளது. பராசக்தி படம் வருகிற 2026ம் ஆண்டில் பொங்கல் ரிலீஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பராசக்தி மதராஸி ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிக்கும் 24வது படமாக அது உள்ளது. எஸ்கே 24 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் டைரக்ட் செய்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்தான் எஸ்கே 24 படத்தை தயாரிக்கிறது. இந்த படம் அப்பா மகன் பாசத்தை மையப்படுத்திய ஒரு வேறுபட்ட கதைக்களத்தில் உருவாகிறது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் இது ஒரு மாறுபட்ட கதையாக அவரை காட்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த கதையை ஒருவரி கேட்டவுடனே சிவகார்த்திகேயன் ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் எஸ்கே 24 படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதற்கான ப்ரீ புரடக்சன் பணிகள் இப்போது துவங்கி நடந்து வருகின்றன. சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு மோகன்லால் அப்பாவாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





