தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகர்களில் ஒருவர் காளி வெங்கட். ராஜா மந்திரி லப்பர் பந்து இறுதிச்சுற்று ராட்சசன் முண்டாசுப்பட்டி கொடி சூரரைப் போற்று குரங்கு பெடல் என பல படங்களில் காளிவெங்கட் நடிப்பு மிக சிறப்பாக அழுத்தமாக இருந்தது. சில காட்சிகளில் வந்தாலும் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்.
குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் அநீதி. இந்த படத்தில் நாயகனாக அர்ஜூன் தாஸ், நாயகியாக துஷாரா விஜயன் நடித்திருந்தனர். இந்த படத்தில் சிறுவயது அர்ஜூன் தாஸ் தந்தையாக காளி வெங்கட் நடித்திருந்தார். மளிகை கடையில் வேலை செய்யும் அவர் தன் ஆசை மகனுக்காக சாக்லேட் எடுக்கும்போது ஏற்படும் பிரச்னையில் திருடனாக அவரை கட்டி வைத்து அடிப்பார்கள். இந்த காட்சியில் காளி வெங்கட் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
நடிகர் காளி வெங்கட் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மெட்ராஸ் மேட்னி. இயக்குனர் கார்த்திகேயன் மணி இயக்கிய இந்த படத்துக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. யதார்த்தமான கதைக்களமாக இந்த படம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை சமீபத்தில் படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வெற்றி விழாவில் நடிகர் காளி வெங்கட் பேசியதாவது, இந்த படத்தில் சத்யராஜ் ரோஷிணி ஷெல்லி ஆகியோருடன் நான் இணைந்து நடித்தது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்தது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக எடுக்க இங்கு யாரும் முன் வருவது கிடையாது. யதார்த்த படங்கள் அதிகமாக எடுக்கப்பட வேண்டும்.
எதற்கெடுத்தாலும் மலையாள படங்களை பாருங்கள் என்று அடிக்கடி நம்மை வெறுப்பேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. எந்த கேரக்டர் என்றாலும் அதற்கு உண்மையாக நடிக்க வேண்டும். ஹீரோ என்ற நிலையில் நான் இல்லை. அந்த பாதையில் என் பயணமும் இல்லை.
முத்தக்காட்சி, ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதில்லையே என்றெல்லாம் என்னை சிலர் கேட்கிறார்கள். இந்த சிந்தனை இயக்குனர்களுக்கு வராமல் நான் என்ன செய்ய முடியும்? ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கிறது. 250 பேருக்கு முன்பு இருவரிடையே நடக்கும் ரொமான்ஸ் என்பது சாதாரண விஷயம் கிடையாது. அந்த சவாலை செய்ய நானும் தயாராகவே இருக்கிறேன் என்று நடிகர் காளி வெங்கட் அந்த விழாவில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





