சினிமா என்பது பொழுதுபோக்கு கலையாக இருக்கிறது. கலைக்கு மொழி இல்லை என்று கூறப்பட்டாலும் ரசிகர்கள் இன்னும் மொழியால் வேறுபட்டுதான் இருக்கின்றனர். தங்கள் மொழி ஹீரோவுக்கு தரும் அதீத முக்கியத்துவத்தை மற்ற மொழி ஹீரோக்களுக்கு தர மாட்டார்கள். அதற்கு சரியான உதாரணமாக தெலுங்கில் நாகர்ஜூனா நடிப்புக்காக பட்டைய கிளப்பிக் கொண்டு ஓடிய குபேரா, தமிழில் ரசிகர்களிடம் எடுபடவில்லை.
மேலும் சினிமா என்பது வியாபாரம்தான். அதில் லாபமே பிரதானம். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான குபேரா படம் இந்தி மலையாளம் கன்னடம் என பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. ஆனால் அது நேரடி தெலுங்கில் உருவான படமாக தான் இருக்கிறது. அதனால்தான் தெலுங்கில் கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை என்ற பரவலான குற்றச்சாட்டும் நிலவுகிறது.
உலகளவில் 5 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த குபேரா படம், தமிழ்நாட்டில் 17 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இந்த சூழலில் இப்போது நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். அதே போல் நடிகர் கார்த்தி, தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் ஹிட் 4 படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் நடிகர்கள் தெலுங்கில் நடிப்பதும், தெலுங்கு நடிகர்கள் தமிழில் நடிப்பதும் தவறான விஷயம் அல்ல. மல்ட்டி ஸ்டார் படங்களாக தான் பான் இந்தியா படங்கள் உருவாகின்றன. ஆனால் தெலுங்கு பட நிறுவனங்கள் தயாரிப்பில், தெலுங்கு பட இயக்குனர்கள் இயக்கும் படங்கள் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் பட்சத்தில் அது தெலுங்கு படமாகவே 90 சதவீதம் இருக்கும். அதில் தமிழ் நடிகர்கள் நடித்தால் அவர்களுக்கான வரவேற்பு காணாமல் போகும். சமீபத்தில் வெளியான குபேரா படம், அதை தான் பிரதிபலித்து இருக்கிறது.
அதனால் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளை இயக்கும் தெலுங்கு இயக்குனர்கள், இரு மொழி படங்களை தயாரிக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் வியாபார ரீதியாக விமர்சன ரீதியாக தெலுங்கு சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு செல்வார்கள். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டிய நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்கள் படங்களில், தெலுங்கு தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருந்தால் தமிழ் சினிமாவின் எதிர்கால நிலை என்ன என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை பிடிப்பதற்காக தெலுங்கு இயக்குனர்கள், தெலுங்கு தயாரிப்பாளர்கள் படங்களில் தமிழ் ஹீரோக்கள் நடிப்பதாக சொல்லப்பட்டாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அந்த படங்கள் ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் ஹீரோக்கள் நினைத்தபடி ஜெயிக்க முடியும். இல்லை என்றால் குபேரா படத்தின் மூலம் கிடைத்த கசப்பான அனுபவம்தான் தெலுங்கு இயக்குனர்கள், தெலுங்கு தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்கும் தமிழ் ஹீரோக்களுக்கும் கிடைக்கும் என்ற சர்ச்சை இப்போது எழுந்துள்ளது.





