நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்த படம் காந்தாரா. கடந்த 2022ம் ஆண்டில் கன்னட மொழியில் கர்நாடகா மாநிலத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடிய நிலையில் தமிழ் தெலுங்கு இந்தி என மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றது.
அதனால் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட காந்தாரா படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியை தனது போயஸ்கார்டன் வீட்டுக்கே நேரில் வரவழைத்து பாராட்டினார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தை ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. பல்வேறு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் காந்தாரா சாப்டர் 1 படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று வெளியாக உள்ளது.
அதற்கு முன்னதாக நேற்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் வெளியீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு மொழியிலும் திரை பிரபலங்கள் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நிலையில் தமிழ் சினிமாவில் இப்போது மிகவும் கவனிக்கப்படுகிற நட்சத்திர நடிகராக உள்ள சிவகார்த்திகேயன், தனது எக்ஸ் பக்கத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லரை வெளியிட்டு இருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், வருகிற அக்டோபர் 1ம் தேதி தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை படம் வெளிவர இருக்கிறது. அதற்கு போட்டியாக அடுத்த நாளே காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாக உள்ளது. அதனால் தனுஷூக்கு போட்டியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டும் என்றே காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லரை வெளியிட்டு உள்ளார் என்று சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர்.
அந்த படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள நட்பு காரணமாக, காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லரை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு பிரமோசன் செய்திருக்கிறார். மற்றபடி தனுஷ் நடித்த இட்லி கடை படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் விளக்கம் தந்திருக்கிறார்.





