நடிகர் அஜீத்குமார் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார். இந்த படத்துக்காக அஜீத்குமாரின் சம்பளம் ரூ. 180 கோடி என தீர்மானிக்கபட்டுள்ளது. ஆனால் குட்பேட் அக்லி படத்துக்கு அவர் 163 கோடி ரூபாய் வாங்கிய நிலையில், இந்த படத்துக்கு ரூ. 17 கோடி அதிகரித்திருக்கிறார்.
ஏகே 64 படத்தை முதலில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் அஜீத்குமார் சம்பளம் இதர செலவுகள், கடந்த அஜீத் படங்களில் வசூல் என பலவற்றையும் கணக்குப் போட்டு பார்த்துவிட்டு, வேண்டாம் என விலகி விட்டார்.
அதன்பிறகு சன் பிக்சர்ஸ் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சத்யஜோதி பிலிம்ஸ் ஏசியன் தயாரிப்பாளர் சுனில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் என பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் அஜீத்குமார் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மட்டுமே அஜீத்குமார் சம்பளத்தை 100 கோடி ரூபாயாக குறைத்தால் யோசிப்பதாக கூறியது.
ஆனால் அஜீத்குமார் தரப்பில் 130 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜீத்குமார் தனக்கான சம்பளத்தை முதலில் பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக தர வேண்டும் என்றும் ஷூட்டிங் முடியும் முன்பே மொத்த சம்பளத்தையும் செட்டில் செய்ய வேண்டும் என்றும் அதையும் தனது வங்கி கணக்குக்கு முன் தேதியிட்ட செக்குகளாக தர வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது முன்னணி தயாரிப்பு நிறுவனங்களை அதிருப்தியடைய செய்திருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தை தயாரித்தது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான். அப்போதே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் அந்த நிறுவனத்துக்கும் நிறைய பஞ்சாயத்து நடந்திருக்கிறது. ஆனால் மீண்டும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைய ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சிறிதும் விருப்பமில்லை. அதனால் தனது மாமனார் நடிகர் பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ் மூலமாக ஏகே 64 படத்தை தயாரிக்க அவர் முயற்சி செய்தார்.
ஆனால் ஏற்கனவே அஜீத்குமார் நடித்த அசல் படத்தை தயாரித்த வகையில், சிவாஜி பிலிம்ஸ் பலத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. அதனால் ஏகே 64 படத்தை பிரபு தரப்பில் சம்மதம் கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் நீடித்தது. இந்த சூழலில் ஏகே 64 படத்தை தயாரிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் முன்வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர் நடிகர் விஜய் நடித்த பல படங்களை தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வினியோகம் செய்தவர். ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையும் ராகுல்தான் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.





