- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்வர் சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்… - நாகேஷிடம் வித்யாசமாக சம்பளம் கேட்ட பிரபல சீனியர்...

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்… – நாகேஷிடம் வித்யாசமாக சம்பளம் கேட்ட பிரபல சீனியர் நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் நாகேஷ். அவரது காமெடிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.நாகேஷ் நாயகனாக நடித்த படம் சர்வர் சுந்தரம். கடந்த 1964ம் ஆண்டில் இந்த படம் வெளிவந்தது. அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, தனக்கும் நடிகர் எஸ்வி ரங்காராவுக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை ஒருமுறை நடிகர் நாகேஷ் பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து நடிகர் நாகேஷ் கூறியதாவது, சர்வர் சுந்தரம் படம் தொடங்கி முதல் நாள் படப்பிடிப்புக்கு நான் போனேன். அந்த கேரக்டருக்கு உரிய கோட் சூட் உடையோடு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நான் போய் இறங்கினேன். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தனியாக ரம்மியமான சூழலுடன் ஒரு இடம் இருக்கும்.

- Advertisement -

காற்றோட்டமான அந்த இடத்தில், ஷாட் இல்லாத நேரத்தில் நடிகர்கள் கூடியிருப்பார்கள். நான் போகும்போது ரங்காராவ் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், இங்க வா, என்ன ஹீரோவா நடிக்கிறாயா. ஹீரோ ஆயிட்டதால எங்களையெல்லாம் மதிக்காமல் போறியா என்று என்னை கிண்டலாகக் கேட்டார்.

நான் அதெல்லாம் இல்லீங்கப்பா என்றேன். அப்பா அப்பான்னு சொல்றே, நீ ஹீரோவாக நடிக்கிற படத்தில் நான் இருக்க வேண்டாமா, போய் எனக்கு சான்ஸ் கேட்டுட்டு வா என்று என்னை அனுப்பி வைத்தார். விளையாட்டுக்கு சொல்கிறாரா, இல்லை கேலி செய்கிறாரா என்றே தெரியவில்லை. ஆனால், இயக்குநர் பஞ்சுவிடம் சென்று ரங்காராவ் இப்படி சொல்கிறார் என்றேன்.

- Advertisement -

உடனே அவர் ஒரு காட்சியில் டைரக்டராக ரங்காராவை நடிக்க வைத்து விடலாம் என்று சொல்லிவிட்டார். அந்தக் காட்சியில் நடிகையாக மனோரமாவை நடிக்க வைத்தார்கள். அவர் வழக்கம்போல் அவரது பாணியிலேயே நடித்தார். அப்போது ஸ்பாட்டில் இருந்த ரங்காராவ் தந்த யோசனையால், அந்தக் காட்சியில் சரோஜா தேவியை போல் மனோரமா சிறப்பாக நடித்திருந்தார்.

படப்படிப்பு முடிந்தது. ரங்காராவ் மிக அழகாக நடித்துவிட்டார். அவருக்கு சம்பளம் தருவது பற்றிய பேச்சு வந்தது. யாருக்கும் அவரிடம் போய் கேட்க பயம். இயக்குநர் பஞ்சு, நீதான் போய் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் மெதுவாக, அப்பா உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்றேன். எவ்வளவு தருவே என்று கேட்டார். நான் பயந்து போய், நீங்க எவ்வளவு கேட்குறீங்களோ, அதைத் தருவேன், என்றேன். உடனே அவர், சம்பளம் எதுவும் வேணாம். ரெண்டு பெக் விஸ்கி மட்டும் போதும். வா நீயும் என்னோடு வந்து சாப்பிடேன், என்று சாதாரணமாகக் கேட்டார். அதெல்லாம் ஒருகாலம் என்று நடிகர் நாகேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்