நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியான படம் அமரன். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. உலகம் முழுவதும் 325 கோடி ரூபாய் வசூலித்த இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 45 கோடியில் இருந்து ரூ. 70 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகிவிட்டார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அவர் அறிவித்திருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அந்த படம் வெளியாக உள்ள நிலையில், விஜயின் இடம் தமிழ் சினிமாவில் காலியாக உள்ளது.
அதனால் நடிகர் விஜயின் இடத்தை பிடிக்கப் போவது நடிகர் சிவகார்த்திகேயன்தான். அவர்தான் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். நடிகர் விஜய் இடத்தை பிடிக்க அவரால் மட்டுமே முடியும் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கு சிலர் மறுப்பும் தெரிவித்து விஜய் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்றும் கூறுகின்றனர். விஜய் நடிகர் ரஜினிக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருக்கிறார். அரசியலில் விஜயகாந்துக்கு பிறகு விஜய்க்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் வெளிப்படையாக தெரிகிறது. அதனால் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் என்று சொல்ல முடியாது என்றும் கருத்துகள் வெளியாகி உள்ளன.
இந்த சூழலில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் பராசக்தி. இந்த படம் அவரது 25வது படமாகும். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் ரவி மோகன் நடித்து வருகிறார். ஜெயம் படம் மூலம் நடிகரான ரவி மோகன், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சீனியர் நடிகராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனால் படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவிடம் பேசிய படத்தின் ஹீரோ நடிகர் சிவகார்த்திகேயன், சீனியர் நடிகர் என்பதால் ரவி மோகனுக்கு அதிக காட்சிகளை ஒதுக்கி தந்து, என்னை டம்மியாக்கி விடாதீர்கள். படம் முழுவதும் நான்தான் வர வேண்டும். நான் 4 காட்சிகளில் வந்தால் அவர் ஒரு காட்சியில்தான் வரவேண்டும். படத்தில் என்னை மட்டுமே ஹைலைட் செய்யுங்கள் என்று கூறியதாக தகவல் கசிந்துள்ளது.





