ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜூனா, சோபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக பாலிவுட் நடிகர் அமீர்கான் இதில் இடம் பெற்றுள்ளார். அவர் மொத்தம் 15 நிமிடங்கள் படத்தில் வருவார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த கதை நகரும் என்று கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில் அதற்கான அப்டேட்டுகளை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில் கூட படத்தில் இருந்து மோனிகா பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். இதன் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் இது வசூல் செய்ததாக சொல்கிறார்கள். படத்தின் திரைக்கதை சற்று தொய்வாக இருந்தாலும், ரஜினிக்கு உண்டான மாஸ் காட்சிகளை சரியான இடத்தில் வைத்து பாராட்டைப் பெற்றார் இயக்குனர் நெல்சன்.
அது மட்டுமல்ல கிளைமாக்ஸ் காட்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோருக்கு பர்ஃபெக்ட்டான சீன்களை வைத்து பாராட்டை பெற்றார். இப்படியான சூழலில் அதன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த இரண்டு மூன்று மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய இடங்களில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். முதல் பாகத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் இதிலும் இடம்பெற்று இருக்கிறார்கள். மிக முக்கியமாக தெலுங்கு நடிகர் பாலையா இதில் கேமியோ ரோலில் வருவதாக சொல்லப்படுகிறது. இதேபோல் பகத் பாஸிலும் படத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா என்னும் அசத்தலான வெற்றி திரைப்படத்தை கொடுத்த நித்திலன் சுவாமிநாதன், அண்மையில் ரஜினிகாந்த் சந்தித்து கதை கூறி இருந்தார். இது சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து விட்டதாக சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் மிக அதிக சம்பளம் வாங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.





