தமிழக அரசு சார்பில் கடந்த 13ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் குடும்பம் சார்ந்தவர்களும் இளையராஜா குடும்பம் சார்ந்தவர்களும் கலந்துக்கொண்டனர். மற்ற இசையமைப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் மற்ற நடிகர் நடிகைகள் குறிப்பாக இளையராஜா இசையில் பாடிய பாடகர்கள் பாடகிகள் என யாருமே இந்த விழாவில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீபத்தில் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மட்டுமே முன்வரிசையில் அமர்ந்து கலந்துக்கொண்டனர். அவரது குடும்பம் சார்ந்த பெண்கள் மட்டுமே முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.
இதன்மூலமாகவே திமுக குடும்ப அரசியல்தான் நடத்துகிறது என்பது தெளிவாகிறது. பெண்களுக்கு சம உரிமை தருவதாக கூறும் திமுக அரசு நடத்திய இந்த விழாவில் மற்ற எந்த பெண்களுக்கும் அழைப்பு இல்லை. இளையராஜா பாராட்டு விழாவில் எந்த பெண்களையும் பார்க்க முடியவில்லை. இளையராஜா இசையில் பெண்கள் யாருமே பாடவில்லையா?
நான் விசாரித்து பார்த்துவிட்டேன். பெண்கள் யாருக்குமே இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடவில்லை. அரசியல் சார்ந்து கலை சார்ந்து எத்தனையோ பெண்கள் உள்ளனர். பாடகிகள் நடிகைகள் என்று யாருமே இந்த விழாவுக்கு வரவழைக்கப்படவில்லை. இதுதான் திமுக நடத்தும் குடும்ப அரசியல் என்பதை இளையராஜா பாராட்டு விழாவே வெளிப்படுத்தி விட்டது.
பெண்களின் பெருமை குறித்து திமுக தொடர்ந்து பேசுகிறது. ஆனால் 50 ஆண்டுகால சாதனைக்காக இளையராஜா பாராட்டு விழாவில் அவரது குடும்பத்தினர் தவிர ஒரு பெண்ணை கூட பார்க்க முடியவில்லை. அரசு சார்பில் நடத்தும் விழாவில் பெண்களுக்கு அழைப்பு விட ஏன் ஸ்டாலின் மறந்துவிட்டார். இதுதான் பெண்களுக்காக அரசு என்று கூறுவது சரிதானா என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி பேசியிருக்கிறார்.





