திரைப்பட இசையமைப்பாளர்களின் இசைக்கச்சேரி என்றாலே பல ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்துவிடுவார்கள். திரையில் அவர்களது இசையில் பாடல்களை ரசித்த ரசிகர்களுக்கு அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு என்றால் அந்த கான்செர்ட்களில் பங்கேற்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக 10 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் என டிக்கெட் கட்டணத்தை அள்ளித் தரவும் அவர்கள் யோசிப்பது இல்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் இளையராஜா கங்கை அமரன் தேவா ஸ்ரீகாந்த் தேவா வித்யாசாகர் அனிருத் தேவிஸ்ரீ பிரசாத் விஜய் ஆண்டனி என பலரும் இதுபோன்ற இசை கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா என பிற மாநிலங்களிலும் சிங்கப்பூர் மலேசியா துபாய் லண்டன் அமெரிக்கா என வெளிநாடுகளிலும் அடிக்கடி நடத்துகின்றனர்.
அதிலும் சமீபகாலமாக இசையில் பெரிய அளவில் டீன் ஏஜ் வயதினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள அனிருத் இசை கச்சேரி என்றால் ஒரு மணி நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் விற்று தீர்ந்து விடுகின்றன. சமீபத்தில் பெங்களூருவில் இசைக்கச்சேரி நடத்திய அனிருத், அடுத்ததாக சென்னையை அடுத்துள்ள மகாலிபலிபுரம் பகுதியில் இசைக் கச்சேரி வருகிற 26ம் தேதி நடத்துவதாக அறிவித்து இருந்தார்.
ஆனால் நேற்று திடீரென இந்த இசைக்கச்சேரியை ரத்து செய்வதாக தனது வலைதள பக்கத்தில் அனிருத் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். இதையறிந்த ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆன்லைன் கவுண்டர் ஓபன் செய்தவுடன் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த இசை நிகழ்ச்சியில் மேலும் பலர் பிரஷர் தந்த நிலையில், இன்னும் கூடுதலாக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்க அனுமதி கேட்ட போது போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. ஏனெனில் 30 ஆயிரத்துக்கு மேல் அங்கு ரசிகர்கள் திரண்டால் அது பல பின்விளைவுகளை மோசமான சூழலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.
இதையடுத்து மிக விரைவில் அனிருத் இசைக்கச்சேரி நடக்கும் இடம் மற்றும் தேதியை ஒரு வாரத்துக்குள் அறிவிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. அது நேரு ஸ்டேடியமாக இருக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் கிங்டம் கூலி படத்தின் ரீ ரிக்கார்டிங் பணியில் அனிருத் மிக பிஸியாக இருந்து வருவதால், இசை கச்சேரிக்காக 5 நாட்கள் வரை ஒதுக்க வேண்டிய சூழலும், இந்த கான்செர்ட்டை அவர் ரத்து செய்ய முக்கிய காரணம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





