இப்போது போல கருப்பு வெள்ளை சினிமா இருந்த அப்போதும் 2 முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் பெரிய அதிசயமான ஒரு சம்பவம்தான். அந்த வகையில் நடிகர் எம்ஜிஆர் நடிகர் சிவாஜி கணேசன் இருவரும் நடித்த ஒரே ஒரு படம் கூண்டுக்கிளி. இந்த ஒரு படத்தில் மட்டுமே இருவரும் இணைந்து நடித்தனர்.
அதே போல் நடிகர் எம்ஜிஆருடன் நடிகர் ஜெமினி கணேசன் இணைந்து நடித்த படம் முகராசி. இதில் எம்ஜிஆர் தம்பியாகவும் அவருக்கு அண்ணனாக ஜெமினி கணேசனும் நடித்திருப்பார். ஆனால் எம்ஜிஆர் சிவாஜி நடித்த கூண்டுக்கிளி படத்தை போலவே எம்ஜிஆர் ஜெமினி நடித்த இந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ஜெமினி கணேசன் நடித்த காவியத்தலைவி என்ற படப்பிடிப்பு ஒரு ஸ்டுடியோவில் நடந்தது. அதே ஸ்டுடியோவில் எம்ஜிஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் கிளைமாக்ஸ் படப்பிடிப்பும் நடந்தது. அப்போது 2 வேடங்களில் நடித்த எம்ஜிஆர், தலையில் கட்டுடன் கோர்ட் கூண்டில் நின்று நான் நிரபராதி என்று பேசுவது போன்ற காட்சியை படமாக எடுத்துக்கொண்டு இருந்தனர்.
அருகில் எம்ஜிஆர் ஒரு ஷெட்டில் படப்பிடிப்பில் இருப்பதை அறிந்த நடிகர் ஜெமினி கணேசன், ஷாட் இடைவேளையின் போது நேரடியாக எம்ஜிஆரை பார்க்க அங்கு வந்துவிட்டார். அவர் பெரிய நடிகர் என்பதால் அவரை யாரும் அங்கு தடுக்கவில்லை. அப்போது ஜெமினியை பார்த்த எம்ஜிஆர் ஆச்சரியமாக, என்ன தம்பி திடீர்ன்னு வந்திருக்கீங்க? என்ன விஷயம் என்று கேட்டிருக்கிறார்.
ஒண்ணும் இல்லேண்ணா, உங்களை பார்க்கணும் போல தோணுச்சு வந்தேன். உங்க கூட ஒரு புகைப்படம் எடுத்துக்கலாமா என்று கேட்டிருக்கிறார். அதுக்கென்ன வாங்க எடுத்துக்கலாம். ஆனா நான் இப்போ டல் மேக்கப்புல இருக்கேனே? என்றும் எம்ஜிஆர் கூறியிருக்கிறார். அதனால் என்னண்ணே, அதுவும் ஒரு ஞாபகமா இருக்குமே என்று கூறி ஜெமினி அவரிடம் சம்மதம் வாங்கியிருக்கிறார்.
மேலும் சுற்றுமுற்றும் பார்த்த நடிகர் ஜெமினி கணேசன், அங்கிருந்த சாட்சி கூண்டை பார்த்து அங்கே நின்று போட்டோ எடுத்துக்கலாம்ண்ணே, அதுவும் ஒரு ஞாபகமாக இருக்கும் என்று சொல்ல, சிரித்தபடியே எம்ஜிஆரும் ஓகே சொல்லியிருக்கிறார். பிறகு சாட்சி கூண்டில் இருவரும் ஏறி நின்று ஒரு புகைப்படமும் எடுத்திருக்கின்றனர். எம்ஜிரை இப்படி சாட்சி கூண்டில் ஏற்றிய ஒரே நடிகர் ஜெமினி கணேசன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.





