இயக்குனர் பாரதிராஜா பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தவர். அதில் அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். இந்த படத்தில் ராதா வடிவுக்கரசி ரஞ்சனி அருணா சத்யராஜ் வீராச்சாமி ஜனகராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இன்றும் முதல் மரியாதை படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு படமாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக முதல் மரியாதை படத்தில் இளையராஜா இசையில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வைரமுத்து. பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி மற்றும் இளையராஜா. பாடல்கள் அனைத்தும் தேனில் விழுந்த பலாச்சுளைகளாக இருந்தன. இதில் நடிகர் சிவாஜி கணேசனின் மனைவியாக காரை வீட்டு பொன்னாத்தா என்ற கேரக்டரில் நடிகை வடிவுக்கரசி நடித்திருந்தார்.
ஊர் பண்ணையார், பஞ்சாயத்து தலைவராக இருக்கும் மலைச்சாமி கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அந்த கிராமத்துக்கு பரிசல் ஓட்டும் பரிசல்காரியாக ராதா நடித்திருந்தார். சிவாஜிக்கும் ராதாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நட்பாகி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் நிலையில், ஊருக்குள் வரும் சத்யராஜை ராதா கொன்று விடுவார். பிறகு கிளைமாக்ஸில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை.
முதல் மரியாதை படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சீனியர் நடிகை வடிவுக்கரசி கூறியதாவது, இந்த படத்தில் நடிக்கவே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒவ்வொரு சீனிலும் இந்த படத்தில் விருப்பமின்றி தான் நான் நடித்தேன். அதிலும் சிவாஜி கணேசனுக்கு சாப்பாடு போடும் காட்சியில் மூக்கை சிந்துவது போன்ற காட்சியெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை.
ஆனால் எங்க டைரக்டர் அப்படி நடித்துக் காட்டி என்னை நடிக்க சொன்னார். ச்சீ என்ன இது, இந்த ஆளு இப்படி கர்மம் பிடிச்ச மாதிரி எல்லாம் பண்றார். மூக்கை சிந்துவது போல், அதை புடவையில் துடைத்துக்கொள்வது போல் எல்லாம் அவர் நடிக்க சொல்றாரே என்று எனக்கு டைரக்டர் மேல் கோபமாக வந்தது. அவர் சொன்னதை எல்லாம் நான் அப்போது ஆத்திரத்திலேயே தான் செய்தேன்.
அப்புறம் ஒரு பெரிய பாத்திரம் நிறைய காஃபியை கொடுத்து குடிக்க சொல்லி விட்டனர். நிஜ காஃபி அது. நான் குடிக்கிறேன் குடிக்கிறேன் காபி தீரவே மாட்டீங்குது. டைரக்டரும் கட் சொல்ல மாட்டேங்கிறார். எல்லாத்தையும் நான் குடிச்ச பிறகு கட் சொன்னார். அப்பவே கொட கொடன்னு குடிச்ச காஃபி பூராவும் வாந்தியாகி வெளியே வந்துவிட்டது. அந்த மாதிரி படம் முழுக்க நான் கோபத்துலேயே நடிச்ச படம் முதல் மரியாதை என்று அந்த நேர்காணலில் நடிகை வடிவுக்கரசி கூறியிருக்கிறார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





