இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யாமேனன் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான படம் தலைவன் தலைவி. 4 நாட்களில் இந்த படத்தின் வசூல் 30 கோடி ரூபாயை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களில் நிரம்பி வழிகிறது.
இந்த படத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதியும் அவரது மனைவியாக நித்யாமேனனும் நடித்திருக்கின்றனர். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகளை சண்டை சச்சரவுகளை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் உருவாக்கி இருக்கிறார். ஏற்கனவே நம்மவீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் போன்ற மாஸ் ஹிட் படங்களை தந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலைவன் தலைவி படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தை தயாரித்திருப்பது சத்யஜோதி பிலிம்ஸ்தான். இந்த படத்தை தயாரித்த வகையில், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு இப்போதைய வசூல் நிலவரப்படி 20 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் தலைவன் தலைவி படம் உருவாக துவங்கிய போது, இந்த படம் 5 தயாரிப்பு நிறுவனங்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் பிரபல முன்னணி தயாரிப்பாளர்கள் எஸ்எஸ் லலித்குமார், ஞானவேல் ராஜா, சுஜாதா விஜயகுமார் நடிகர் சூரியின் மேலாளர் குமார் மற்றும் சக்தி பிலிம்ஸ் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால் இதில் சுஜாதா விஜயகுமார் இதில் தனது மருமகன் நடிகர் ரவிமோகனை நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார். அதே போல் நடிகர் சூரியின் மேனேஜரும் இந்த படத்தை தயாரித்திருந்தால் நடிகர் சூரிதான் இந்த படத்தில் நாயகனாக இருந்திருப்பார். ஆனால் இவர்கள் யாருமே இந்த படத்தை தயாரிக்க முன்வராத நிலையில், கடைசியில்தான் சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இதில் கதாநாயகனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக முதலில் நடிக்க வாய்ப்பு இருந்தது நடிகர் ரவி மோகன் அல்லது நடிகர் சூரிக்குதான். ஆனால் அவர்கள் தரப்பில் இந்த படத்தை தயாரிக்காமல் நழுவ விட்டதால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு தலைவன் தலைவி படம் ஜாக்பாட் போல யோகம் அடித்து விட்டது. விஜய் சேதுபதிக்கும் ஒரு வெற்றிப்படமாக இது அமைந்து விட்டது.





