எப்போதுமே ஒரு போட்டியில் வெற்றி பெற்ற ஒருவர் தன்னுடைய வெற்றியை, தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை மட்டுமே பெரிதாக நினைத்து சந்தோஷப்படுவார். மற்றபடி சக போட்டியாளர்களின் தோல்வியை நினைத்து வருத்தப்பட மாட்டார்கள். அதை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதுதான் மனித இயல்பாக இருந்து வருகிறது.
ஆனால் எனக்கு கொடுத்த விருது முக்கியமல்ல. தகுதிக்குரிய அந்த படைப்புக்கு அந்த படைப்பாளிக்கு ஏன் அங்கீகாரம் இல்லை, விருது வழங்கப்படவில்லை என்று கேட்பதுதான் உண்மையான ஒரு கலைஞனின் கோபமாக இருக்க வேண்டும். அந்த விஷயத்தில் நடிகை ஊர்வசி இப்போது ரசிகர்களால் பாராட்டுக்குரிய ஒருவராக மட்டுமின்றி மரியாதைக்கு உரிய ஒரு சிறந்த நடிகையாகவும் பார்க்கப்படுகிறார்.
சமீபத்தில் மத்திய அரசு 71வது தேசிய விருது தேர்வு பட்டியலை வெளியிட்டது. இதில் சிறந்த துணை நடிகையாக உள்ளொழுக்கு படத்தில் நடித்த நடிகை ஊர்வசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அவருக்கு வழங்கப்படும் 2வது தேசிய விருதாகும். அதே போல் தமிழில் பார்க்கிங் படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்துக்கு எந்த விருதும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் பிருத்விராஜ் இந்த தேசிய விருது தேர்வு குழுவினால் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எம்புரான் படத்தில் பாஜகவுக்கு எதிரான கருத்துகளை காட்சிகளை கொண்டு வந்ததால் நடிகர் பிருத்விராஜ் தேசிய விருது பட்டியலில் கவனமாக தவிர்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 1980 90களில் இருந்தவர் நடிகை ஊர்வசி. மிக இயல்பான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இப்போது தமிழில் அம்மா கேரக்டர்களில் அதிகமாக நடித்து வருகிறார். நடிப்பை பொருத்த வரை நடிகை ஊர்வசி தன்னிகரற்ற ஒரு கலைஞராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது படைப்பாளிகள் தேர்வு குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை ஊர்வசி கூறியதாவது, ஆடுஜீவிதம் படத்திற்கு ஏன் ஒரு பாராட்டு கூட இல்லை? நான் நடித்த ஜே பேபி என்ற படத்தை அவர்கள் பார்த்தார்களா என்று கூட தெரியவில்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம். வரி கட்டுகிறோம். நீங்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு செல்ல இது ஒன்றும் ஓய்வூதியம் அல்ல என்று நடிகை ஊர்வசி கோபமாக பேசியிருக்கிறார்.





