நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். வருகிற 2026ம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராக அமரப் போவது தலைவர் விஜய்தான் என்று தவெக கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களில் பெரும்பாலானோர் உறுதியாக கூறி வருகின்றனர். திமுக அதிமுக கட்சிகளை விரும்பாத நடுத்தர மக்களின் ஒரே வாய்ப்பாக நடிகர் விஜய் மாறி இருக்கிறார்.
தமிழக முதல்வர் எம்ஜிஆர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து அரசியல் களத்தில் குதித்த நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. நிச்சயமாக இந்த மக்களின் எழுச்சி அவரை 2026ம் ஆண்டில் தமிழக முதல்வராக்கி விடும் என்று அரசியல் விமர்சகர்களும் கூறத் துவங்கி விட்டனர்.
இந்நிலையில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை தளபதி விஜய் கடந்தாண்டில் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள விசாலை என்ற கிராமத்தில் மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். பல லட்சம் தொண்டர்கள் மற்றும் மக்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் விஜய் 48 நிமிடங்கள் பேசி அசத்தினார். திமுக பாஜக கட்சிகளே தனக்கு எதிரி என்றும் அறிவித்தார்.
இதையடுத்து தற்போது தவெக கட்சியின் 2வது மாநில அரசியல் மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு 1.5 லட்சம் மக்கள் அமரும் வகையில் பிளாஸ்டிக் சேர்கள் மாநாட்டு திடலில் போடப்பட்டுள்ளன. இதுதவிர மக்கள் மாநாட்டை நின்று ரசிப்பதற்கு வசதியாகவும் காலியிடங்களில் மேட் விரிக்கப்பட்டுள்ளன.
குடிநீர் கழிப்பிடம் மருத்துவம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவியர் கர்ப்பிணிப் பெண்கள் நோயாளிகள் மாநாட்டுக்கு நேரில் வராமல் டிவியில் நேரலையில் கண்டு களிக்குமாறு ஏற்கனவே தளபதி விஜய் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று பிற்பகல் யாரும் எதிர்பாராத ஒரு பகீர் சம்பவம் மாநாட்டு திடலில் நடந்து விட்டது.
தவெக மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் தவெக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட நிலையில் திடீரென அது சரிந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கம்பம் விழுந்த இடத்தில் யாரும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒரு கார் மீது கொடிகம்பம் விழுந்ததால் அந்த கார் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்து பதறிய நடிகர் விஜய், தவெக நிர்வாகிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனால் மாநாட்டு திடலில் பரபரப்பு ஏற்பட்டது.





