அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சி என்பது ஒரு வகையில் தொழில் துறையில் அதுசார்ந்த நுட்பத்தில் பெரிய வளர்ச்சியை தருவதாக இருந்தாலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மனித ஆற்றலின் செயல்பாடுகளை முடக்கி விடுகிறது. அல்லது வேறு ஒரு விதமாக அதுசார்ந்த மற்ற பணிகளில் மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏஐ தொழில்நுட்பம் இப்போது சினிமாவில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நைசா என்ற முதல் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான படம் சமீபத்தில் வெளியானது. கன்னடத்தில் இதே போல் ஒரு படம் ஏஐ தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படியே ஏஐ தொழில்நுட்ப படங்கள் உருவானால், அங்கே மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்காது.
இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் விக்ரம் மல்கோத்ரா சிரஞ்சீவி அனுமன் என்ற ஏஐ தொழில்நுட்ப படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதன்பிறகு இன்னும் பலர் இதுபோன்ற ஏஐ தொழில்நுட்ப படங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் அனுராக் காஷ்யப். முன்னணி நடிகராகவும் இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதே போல் லியோ படத்திலும் கேமிரோ ரோலில் 2 நிமிட காட்சியில் மட்டுமே அனுராக் காஷ்யப் நடித்திருந்தார். மேலும் இந்தி சினிமா குறித்து அவ்வப்போது கடும் விமர்சனங்களை அனுராக் காஷ்யப் முன்வைத்து வருகிறார்.
சினிமாவில் ஏஐ தொழில் நுட்பம் அதிகரித்துள்ளது குறித்து நடிகர் அனுராக் காஷ்யப் கூறியிருப்பதாவது, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் எதிர்காலத்தில் சினிமாவில் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் வந்துவிடும். இப்படிப்பட்ட திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.
இதை எதிர்க்கும் வகையில் ஏஐ படங்களை விட்டு நடிகர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். கலைஞர்கள் எழுத்தாளர்கள் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பதுதான் இதுபோன்ற நிறுவனங்களின் பணி. ஆனால் தற்போது அவர்களின் இலக்கு பணத்தின் மீது மட்டும்தான் உள்ளது என்று நடிகர் அனுராக் காஷ்யப் எச்சரித்திருக்கிறார்.





