தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் நடிகர் ரஜினிகாந்துடன் நான் சிவப்பு மனிதன் மிஸ்டர் பாரத் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சத்யராஜ். ஆனால் 1987ம் ஆண்டில் வெளியான மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு சத்யராஜூம் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவில்லை. 37 ஆண்டுகளுக்கு பின் கூலி படத்தில் மீண்டும் ரஜினியுடன் சத்யராஜ் நடித்திருந்தார்.
இதற்கிடையே ரஜினிகாந்த் குறித்து அவ்வப்போது எதிர்மறையான விமர்சனங்களை வைத்தவர் நடிகர் சத்யராஜ். குறிப்பாக கா்நாடகா காவிரி நீர் தர மறுத்த போது சினிமா துறை சார்பில் நடந்த போராட்டத்தில் ரஜினி குறித்து கடும் விமர்சனங்களை சத்யராஜ் செய்தார். ரஜினி பேரை சொல்லி கைதட்டல் வாங்குவதற்கு நான் நாக்கை பிடுங்கிட்டு சாவேன் என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்ற நிலையில் கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் நடித்திருந்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி படத்தில் எனக்கு சமமான சம்பளம் தருவதாக கூறியும் நடிக்க மறுத்த சத்யராஜ், கூலி படத்தில் நடிக்க சம்மதித்தது என ஆச்சரியமாக இருந்தது என்று கூறினார்.
ரஜினியுடன் இதுவரை 7 படங்களில் வில்லனாக நடித்து விட்டேன். அதனால் கூலி படத்தில் அவரது நண்பன் கேரக்டர் என்றதும் ஒத்துக்கொண்டேன் என்று ஒரு மழுப்பலான காரணத்தை நடிகர் சத்யராஜ் மேடையில் பேசும்போது சொல்லி சமாளித்தார். ஆனால் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தில் சுமன் நடித்த அந்த கேரக்டரில் சத்யராஜ் நடித்திருந்தால் அவரது இமேஜ் வேற லெவலுக்கு போயிருக்கும்.
சிவாஜி படத்தில் நடிக்காமல் போனதற்கான காரணம் குறித்து நடிகர் சத்யராஜ் இப்போது ஒரு நேர்காணலில் விளக்கம் தந்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் சத்யராஜ் கூறியதாவது, சிவாஜி படத்தில் என்னை வில்லனாக நடிக்க இயக்குனர் ஷங்கர் அழைத்தார். அப்போது மார்க்கெட்டில் இறங்கிட்டு இருந்த ஒரு ஹீரோவாக நான் இருந்தேன். என்னுடைய படங்கள் தொடர்ந்து சரியாக போகாமல் இருந்தது.
ஏதாவது ஒரு படம் ஹிட் கொடுத்து ஹீரோவா தாக்குப் பிடிக்கணும்ன்னு நான் தடுமாறிட்டு இருந்த ஸ்டேஜ் அது. அதனாலதான் ஷங்கர்கிட்ட இப்ப நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. ஒரு வெற்றிப் படம் கிடைக்குமான்னு பார்த்துட்டு இருக்கேன். இந்த நேரத்தில் வில்லனா நடிச்சா அப்புறம் தொடர்ந்து வில்லனாதான் நடிக்க கூப்பிடுவாங்க என்று சொல்லிட்டேன். ஆனா இந்த மீடியாவில் என்னென்னவோ நான் சொன்னதா சொல்லிட்டாங்க என்று நடிகர் சத்யராஜ் விளக்கம் அளித்திருக்கிறார்.





