தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. செம்பருத்தி படம் மூலம் இயக்குனராக அவர் அறிமுகமானார். அந்த படத்தில் நாயகன் பிரசாந்த் நாயகனாக நடித்தார். இந்த படத்தில்தான் நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பிறகு தமிழில் முன்னணி நாயகியாக அவர் மாறினார்.
இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய பல படங்களில் நாயகியாக நடித்த ரோஜா, பிறகு ஆர்கே செல்வமணியை காதல் மணம் புரிந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இப்போது ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 34 ஆண்டுகளுக்கு முன் வெளியான கேப்டன் பிரபாகரன் படம் தியேட்டர்களில் ரி ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே தயாரிப்பாளர் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் எஸ் சாம் இயக்கத்தில் உருவான படம் யோலோ. இந்த படத்தில் தேவ் தேவிகா சதீஷ் ஆகாஷ் பிரேம்குமார் படவா கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. யோலோ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
யோலோ பட விழாவில் சிறப்பு விருந்தினராக பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி கலந்து கொண்டார். அப்போது விழாவில் இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசியதாவது, தற்போதைய சூழலில் படங்கள் எடுப்பதை காட்டிலும் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதுதான் பெரிய கஷ்டமான விஷயமாக இருக்கிறது.
அதே வேளையில் புதிதாக வரும் இயக்குனர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நடிகர் படவா கோபி 7 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரு படத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்தப் படத்தின் டைரக்டர் எல்லா லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைத்தார். இதனால் 7 ஆண்டுகளாக அந்த படைப்பு வெளிவராமலேயே இருக்கிறது.
இயக்குனர்கள் முதல் படத்திலேயே லாபம் என்ற நோக்கில் யோசிக்கவோ சிந்திக்கவோ கூடாது. உங்களை நம்பி பணம் போட வரும் தயாரிப்பாளர்களை மதித்து அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் இரண்டாவது படத்தில் இருந்து முன்னேற்றம் தொடங்கும் என்று இயக்குனர் ஆர்கே செல்வமணி கூறியிருக்கிறார். லாப நோக்கில் மட்டுமே படம் எடுத்தால் முதல் படத்திலேயே தோல்வி ஏற்பட்டு விடும் என்று சீனியர் இயக்குனராக ஆர் செல்வமணி அட்வைஸ் செய்திருக்கிறார்.





