அட்லி தற்போது அல்லு அர்ஜுனுடன் இணைந்திருக்கிறார். புஷ்பா ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பாகங்களுக்கு பிறகு அல்லு அர்ஜுனின் திரையுலக மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவே பார்க்கும் ஒரு நடிகராக அவர் உச்சம் தொட்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை கொடுத்தது.
இதன் காரணமாக அல்லு அர்ஜுனின் அடுத்தடுத்து திரைப்படங்கள் குறித்த கவனம் இந்திய சினிமா பக்கம் இழுத்து உள்ளது. இப்படியான சூழலில்தான், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அட்லியும் இதற்கு முன்னதாக ஷாருக் கானை வைத்து, ஜவான் எனும் மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படி, இரண்டு முக்கிய நட்சத்திரங்களுமே ஆயிரம் கோடி ரூபாய் என்னும் அளவைத் தொட்டிருப்பதால் அவர்கள் இணையப்போகும் திரைப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இருவரும் அறிவியல் தொடர்பான கதையை தொடுவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதிலும் வெளிநாட்டில் வி எப் எக்ஸ் பணிகள் தொடர்பாக இருவரும் தீவிரமாக பேசிக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இப்படியான சூழலில் அண்மையில் அந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இதுபோக மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் படத்தின் நடிப்பதாக சொல்கிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. இப்படியான சூழலில் சென்னை சோழிங்கநல்லூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் அட்லி படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
அதில், இந்திய சினிமாவிலேயே அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை நாங்கள் இதில் கொண்டு வர உள்ளோம். அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம்தான் முடிவு செய்யும். நான் பிற திரைப்படங்களில் இருந்து காப்பி அடிப்பதாக பலர் கூறுகின்றனர். எனது வாழ்க்கையில் இருந்து நான் இன்ஸ்பிரேஷன் ஆக அமைவதை படத்தில் வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.





