தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். தொடர்ந்து கார்த்தியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி அவர் இயக்கிய படம் பருத்தி வீரன். 2007ம் ஆண்டில் வெளியான இந்த படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த படத்தில் முத்தழகு கேரக்டரில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காரைக்குடியில் இயக்குனர் கரு பழனியப்பன் மத நல்லிணக்க விழா ஒன்றை நடத்தினார். அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் அமீர் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இயக்குனர் அமீர் கூறியதாவது, நாட்டில் ஒருவருக்கு வாக்களிக்க எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவுக்கு கட்சி தொடங்கவும் உரிமை இருக்கிறது.
விஜய் அரசியல் கட்சியை துவங்கிய போது அதை நான் ஆதரித்தேன். பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு ஒரு புதிய கட்சியை தமிழராக இருக்கும் உச்ச நடிகர் ஒருவர் தொடங்கியதால் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் தரக்குறைவான விமர்சனங்கள் எப்போதும் இருக்கக் கூடாது. எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் களத்தில் கருத்தியலை எதிர்கொள்ள வேண்டும்.
என் உயிர் மூச்சு உள்ள வரை பாசிசத்தையும் பாரதிய ஜனதாவையும் எதிர்ப்பேன். விஜய் நடத்தியது மாநாடு போல் தெரியவில்லை. ரசிகர்கள் சந்திப்பாகவே இருந்தது. மாநாட்டில் தலைவர் பேசிய பிறகு தீர்மானங்கள் வாசிக்கப்பட வேண்டும். தீர்மானங்களை மாநாட்டில் மக்கள் கேட்க வேண்டும். தீர்மானங்களை வாசிக்காமலேயே கூட்டத்தை கலைத்து விட்டார்கள்/
மக்களுக்கான கொள்கைகளை எடுத்து வைப்பவர்கள் மட்டுமே நிலைக்க முடியும். கட்சி ஆரம்பித்த எல்லோரும் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது.தமிழக அரசியலில் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். சிவாஜி கணேசன் கே பாக்யராஜ் சரத்குமார் கார்த்திக் டி ராஜேந்தர் என பல நடிகர்கள் அரசியல் களத்தில் குதித்திருக்கின்றனர்.
தெலுங்கில் சிரஞ்சீவியும் அரசியலுக்கு வந்தார். ஆனால் அப்படி வந்தவர்களில் எத்தனை பேர் நிலைத்தார்கள், மக்களிடம் ஆதரவை பெற்றார்கள் என்பது முக்கியம். சிறந்த தலைவனாக நல்ல கொள்கைளை முன்னெடுத்து சென்றால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்று இயக்குனர் அமீர் பேசியிருக்கிறார். ரசிகர்களின் சந்திப்பு கூட்டம்தான் மதுரை நடந்த தவெக மாநாடு என இயக்குனர் அமீர் விமர்சித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





