தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக கடந்த 1952ம் ஆண்டில் அதாவது 73 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தென்னிந்திய நடிகர் சங்கம். இந்த சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளாக பல முன்னணி நடிகர்கள் இருந்திருக்கின்றனர். குறிப்பாக எம்ஜிஆர் எம்ஆர் ராதா விஜயகாந்த் ராதாரவி சரத்குமார் நெப்போலியன் உள்ளிட்ட பலர் தலைவர் செயலாளர் பொறுப்புகளை வகித்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் நடந்த நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் தலைவராக நடிகர் நாசர் பொதுச் செயலாளராக விஷால் மற்றும் பொருளாளராக நடிகர் கார்த்தி மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் கடந்த 2024ம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பதவிக்காலம் நீடிப்பு செய்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், தனது 2022 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர் பொதுச் செயலாளர் விஷால் பொருளாளராக கார்த்தி துணை தலைவர்களாக பூச்சி முருகன் கருணாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களது பதவிக்காலம் கடந்த 2024ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பதவியை நீட்டிப்பு செய்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சங்கத்தை நிர்வகிக்கவும் தேர்தலில் நடத்தவும் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. உடனே நீதிபதி, நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.
தற்போது நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுமானப் பணி நடந்து வருகின்றன. பணிகள் முடிவடையும் நிலையில் தேர்தலை நடத்தினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நிர்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கில் நடிகர் சங்க நிர்வாகிகள் தரப்பு வாதம் செய்வதற்காக விசாரணையை வருகிற 15ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.





