இயக்குனர் வ கௌதமன் இயக்கத்தில் நடிப்பில் உருவாகும் படம் படையாண்ட மாவீரா. இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படையாண்ட மாவீரர் படத்துக்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த படத்தின் விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார்.
அந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, ஒரு படத்தின் வெற்றி என்பது விழாக்களால் தீர்மானிக்கப்படுவது இல்லை. திரைப்பட உலகப் போக்கு ரொம்பவே துன்பப்படுகிற நிலையில் இருக்கிறது. ஆண்டுக்கு 200 படங்கள் வரும் போது அதில் 10 படங்கள் மட்டுமே வெற்றிக்கு பக்கத்தில் இருக்கின்றன. நிகழ்கால படங்களில் நிறைய பலவீனங்கள் இருக்கின்றன.
நம்மிடையே மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் ஏன் 190 படங்கள் பின்வாங்குகின்றன என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். காரணம் வாழ்க்கையை பார்த்து படம் எடுக்காமல் சினிமாவை பார்த்து படம் எடுக்கிறார்கள். கடந்து போன மனதை தொட்ட வாழ்க்கையை படமாக எடுத்தால் அது ஓடும்.
அதில் ரசிகனுக்கும் திரைக்கும் இடையே தொடர்பு இருக்கும். வாழ்க்கையுடன் சம்பந்தம் இல்லாமல் போனதால் பல படங்கள் விலகிவிட்டன. தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். 6 கோடி பேர் இருந்தபோது 75 சதவீதம் பேர் படம் பார்த்தார்கள். 7 கோடி மக்கள் ஆனபோது அது 60 சதவீதம் ஆனது. இப்போது 8 கோடியில் 35 சதவீதம் பேர்தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். திரைப்படங்கள் மீதான காதல் போய்விட்டதா என தெரியவில்லை.
தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா அதனாலயே வெற்றிப்பாதையை விட்டு ஒதுங்கி விட்டது. சினிமாவில் இப்போது கதாசிரியர்கள் வசனகர்த்தா என்பவர்கள் இல்லை. திரைக்கதை என்கிற ஜாதி இல்லை. இப்போதுள்ள பல இயக்குனர்கள் தனது உதவி இயக்குனரிடம் கூட கதை சொல்வதில்லை. 10 மூளைகளால் செழுமைப்படுத்திய சினிமா ஜெயித்து விட்டது. ஆனால் இப்போது ரசிகர்கள் குறைந்து விட்டார்கள். திருமண வீடியோக்களை கூட சினிமா மாதிரி எடுக்கிறார்கள். சினிமா மீதான ரகசியம் பூடகம் போய்விட்டதா என்று தெரியவில்லை.
நான் அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரி பாடல் எழுதுகிறேன். எழுதிய வரிகளை படித்து காண்பிக்கிறேன். சிலர் அதை ரசித்து கூட பார்ப்பதில்லை. எழுதுவது உன் வேலை என்று பாடலை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். நானும் ரஜினிகாந்தும் வாழ்த்தினால் படம் ஓடுமா என்றால் அது இல்லை. திரைக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே யாரும் நிற்க முடியாது. கடவுளே வந்தாலும் பார்வையாளர்களை கன்வின்ஸ் செய்ய முடியாது என்று கவிஞர் வைரமுத்து அந்த விழாவில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.





