தமிழ் சினிமாவில் எப்போதுமே திகில் மட்டும் திரில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் தான் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், சுந்தர் சி போன்றவர்கள் பேய் படங்களை எடுத்து ரசிகர்கள் மனதில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றனர். வசூலிலும் பல கோடிகளை அள்ளி பலத்த லாபம் அடைந்து வருகின்றனர்.
இப்போது சுந்தர் சி அரண்மனை 5 படத்தை இயக்கி வருகிறார். அதே போல் நடிகர் ராகவா லாரன்ஸ்சும் காஞ்சனா 4 படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சமீபத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி 2 படமும், ஜீவா நடித்த பிளாக் படமும் பெரிய அளவில் கவனம் பெற்று, ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து இருக்கின்றனர்.
கடந்த 2009ம் ஆண்டில் வெளியான தமிழ் படம் ஈரம். இயக்குனர் அறிவழகன் இந்த படத்தில்தான் இயக்குனராக அறிமுகமானார். ஈரம் படத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன் மற்றும் சரண்யா மோகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்ரீநாத், லட்சுமி ராமகிருஷ்ணன், கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். எஸ். தமன் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஈரம் படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்துக்கும் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்ததால், இன்று வரை ஈரம் படம் ஒரு முக்கிய திகில் படமாக ரசிகர்களால் பாராட்டை பெற்ற படமாக இருக்கிறது. இந்த படம் நீரை மையப்படுத்திய திகில் படமாக ரசிகர்களை ரசிக்க வைத்தது.
இந்நிலையில் ஈரம் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. ஆனால் தமிழில் இல்லாமல், இந்தியில் இந்த படம் உருவாகிறது. ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் 2ம் பாகத்தைஇயக்கவில்லை. ஆனால் ஈரம் படத்தில் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா தான் இந்தியில் ஈரம் படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறார். மேலும் ஈரம் படம் கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால், ஈரம் படத்தில் சிந்து மேனன் நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
அதேபோல் ஈரம் படத்தின் இந்தி 2ம் பாகத்திலும் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிற கதையாக உள்ளது. அதனால் இந்தி படத்தின் 2ம் பாகத்தில் போனி கபூர் -ஸ்ரீதேவி நட்சத்திர தம்பதியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக தமிழில் எடுக்கப்படும் படங்கள் அதன் 2ம் பாகம் தமிழில்தான் உருவாகும். ஆனால் தமிழில் வெளியாகி வெற்றியை பெற்ற ஈரம் படத்தின் 2ம் பாகம் இந்தியில் உருவாகிறது. ஈரம் பட இயக்குனர் அறிவழகன் 2ம் பாகத்தை இயக்காமல், அந்த படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் மனோஜ் பரமஹம்சா இயக்குவதும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





