சினிமாவில் தற்போது அதிகளவு பேசப்படும் நபராக மாறி இருக்கிறார் சாய் அபயங்கர். ஆரம்பத்தில் தனி இசை கலைஞராக வலம் வந்த அவர் ஏராளமான ஆல்பங்களை கொடுத்து வந்தார். இந்தப் பாடல்கள் மிகப்பெரிய அளவில் இணையத்தில் ரீச் ஆகின. குறிப்பாக, ஆசை கூட உள்ளிட்ட பாடல்கள் முணுமுணுக்கும் ரகத்தில் இருக்க, பலரும் அதன் இசையமைப்பாளர் யார் என்று தேட ஆரம்பித்தார்கள்.
இப்படிதான் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார் சாய் அபயங்கர். தொடர்ந்து தனி இசை கலைஞராக வலம் வந்த அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கொடுத்தது லோகேஷ் கனகராஜ்தான். தற்போது லோகேஷ் கனகராஜ் பென்ஸ் என்னும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறார் நிவின்பாலி.
எல் சி யு கான்செப்டில் எடுக்கப்படும் இந்த திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படி ஒரு முக்கியமான திரைப்படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சாய் அபயங்கர். பாடகர்கள் திப்பு ஹரிணி தம்பதியின் மகன்தான் சாய் அபயங்கர். பென்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் அமைகின்றன.
குறிப்பாக சூர்யா – ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகும் கருப்பு திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை சாய் அபயங்கர் பெற்றார். இது ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியப்படும் அளவுக்கு அமைந்தது. ஏனென்றால் முதலில் இந்த திரைப்படம் ஏ ஆர் ரகுமானுக்கு சென்றது. ஆனால் அவர் அந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகிக் கொள்ள, பிறகு அது சாய் அபயங்கர் கைகளுக்கு சென்றது.
தொடர்ந்து பிரதிப் ரங்கநாதன் நடித்திருக்கும் டியூட் திரைப்படத்திலும் சாய் அபயங்கர் இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான ஊறும் ப்ளட் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. தற்போது வெளியாகியிருக்கும் நல்லாருப்போ பாடலும், ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறது. இது போக கார்த்தி நடித்து வரும் மார்சல் திரைப்படத்திற்கும் சாய் தான் இசையமைப்பாளர்.
இன்னும் தொடர்ந்து அவருக்கு ஏராளமான திரைப்படங்கள் கைவசம் வந்து குவிகின்றன. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், அனிருத்துக்கும் உங்களுக்கும் போட்டியா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய சாய் அபயங்கர், அனிருத் நிறைய சாதனை செய்துவிட்டார். ஆனால் நான் இப்போதுதான் ஆரம்பித்தே இருக்கிறேன். எனக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தான் சாதாரண செல்போனை பயன்படுத்துவதாகவும் சமூக வலைதளத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.





