தமிழ் சினிமாவில் எப்போதுமே சில படங்கள் ரசிகர்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் மிகச்சிறந்த படங்களாக அமைகின்றன. அந்த வகையில் கடந்த 1982ம் ஆண்டில் வெளியான மூன்றாம் பிறை படம் இன்றும் ரசிகர்களால் மிகவும் விரும்பி ரசித்து பார்க்கப்படுகிற ஒரு சிறந்த படமாக படைப்பாக இருந்து வருகிறது.
இந்த படத்தை பாலுமகேந்திரா டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக கமல்ஹாசனும் நாயகியாக ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். பூர்ணம் விஸ்வநாதன் சில்க் ஸ்மிதா முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். தமிழில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தை இந்தியில் சாத்மா என்ற பெயரில் எடுத்தனர். அங்கும் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. ஊட்டியில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட மூன்றாம் பிறை படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஹீரோ, ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணையே காதலிப்பதுதான் கதை. கடைசியில் அந்த பெண் பழைய நிலைக்குத் திரும்பியதும் கமல்ஹாசன் யார் என்றே தெரியாமல் போய்விடும்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் ரயில்வே ஸ்டேஷனில் கம்லஹாசன் தன்னை அவரிடம் யாரென்று நிரூபிக்க முடியாமல் தோற்றுப் போகும் கிளைமாக்ஸ் காட்சிதான் பெரிய அளவில் இந்த படத்தை ஜெயிக்க வைத்தது. மூன்றாம் பிறை படத்தில் நடித்ததற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது. மூன்றாம் பிறை படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் அப்போது முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீப்பிரியா தான்.
ஆனால் நடிகர் கமல்ஹாசன் தான் ஸ்ரீதேவியை கதாநாயகியா போடுங்க, அவங்க தான் கரெக்டா இருப்பாங்க என்று பரிந்துரை செய்திருக்கிறார். அதன்பிறகே ஸ்ரீதேவி அந்த படத்தில் கதாநாயகி ஆனார். இந்த படத்தை முதலில் மணிரத்னம் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவரிடம் கேட்டபோது, பாலுமகேந்திரா தான் சரியான இயக்குனர் என்று கூறி இருக்கிறார்.
மேலும் மூன்றாம் பிறை படம் பற்றிய முக்கியமான ஒரு விஷயம் இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே என்ற பாடல் தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலாகும். படத்தில் ஸ்ரீதேவி தூங்கும் போது நடிகர் கமல்ஹாசன் பாடும் ஒரு பாடல் காட்சியாக இது இருந்தது. இப்படி மூன்றாம் பிறை படம் உருவானதில் பல விஷயங்கள் திரைக்கு பின்னணியில் நடந்திருக்கின்றன. ஆனால் படம் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படும் ஒரு சிறந்த படைப்பாக ஜெயித்திருக்கிறது.





