கே ஜி எஃப் திரைப்படத்திற்கு முன்பு வரை நடிகர் யஷிற்கு இருந்த மார்க்கெட் வேறு தற்போது இருக்கும் மார்க்கெட் லெவல்லே வேறு என்பதை உறுதியாக கூறலாம். அந்த அளவுக்கு அந்தத் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவு ரீச் கொடுத்தது. கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இதனை இயக்கியிருந்தார். மொத்தம் இரண்டு பாகங்களாக இது எடுக்கப்பட்டது.
முதல் பாகத்தில், தங்கச் சுரங்கத்தை சிலர் அபகரித்து வைத்திருப்பதையும், அதனை நாயகன் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதையும் காட்டியிருப்பார் பிரசாந்த் நீல். அதுமட்டுமல்ல, நாயகனுக்கு ஏற்ற பஞ்ச் வசனங்களும் அதில் திறம்பட இடம்பெற்றிருக்கும். இப்படி முதல் பாகம் பார்த்து பார்த்து எடுக்கப்பட்டதால் சூப்பர் ஹிட் அடித்தது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது என்றே கூறலாம். கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி அந்த திரைப்படம் சாதனை படைத்தது. தாயின் பாசத்தையும், அவரின் சபதமும்தான் இந்த திரைப்படம் கூறும் ஒற்றை வரி என்று உறுதியாக சொல்லலாம்.
இப்போது வரை, கே ஜி எஃப் திரைப்படத்தின் இந்த இரண்டு பாகங்களும் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், நடிகர் யஷ் அடுத்ததாக டாக்ஸிக் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை கீதா மோகன் தாஸ் எனும் பெண் இயக்குனர் எடுத்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அப்போது விதிமுறைகளை மீறி ஏராளமான மரங்கள் படப்பிடிப்பிற்காக வெட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் படத்திற்கான பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதில் யஷ்ஷிற்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம்.
கியரா அத்வானி, கரீனா கபூர் இதில் இடம் பெற்று இருப்பதாக சொல்கிறார்கள். அதேசமயம் நயன்தாரா படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை சகோதரியாக வருகிறாராம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இதற்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறதே என்று சொல்லி வருகிறார்கள்.





