மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் சிறந்த நடிகர்கள் நடிகைகளுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வழங்குகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர் சிறந்த ஒளிப்பதிவு சிறந்த ஒலி வடிவமைப்பு சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று புதுடில்லியில் நடைபெற்றது. இதில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதே சாகேப் பால்கே விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.
விருதைப் பெற்றுக் கொண்ட பின்பு நடிகர் மோகன்லால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கனவு நனவாகவில்லை. இது அதைவிட பெரியது. இது ஒரு மேஜிக் போன்றது மற்றும் புனிதமானது. மலையாள திரைப்படத் துறையில் பிரதிநிதியாக இந்த தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற மிக இளையவராகவும் மாநிலத்தில் இருந்து இரண்டாவது நபராகவும் இருப்பது எனக்கு பணிவை அளிக்கிறது.
இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல, இது முழு மலையாள திரைப்பட சமூகத்துக்கும் உரியது. இந்த விருதை நமது துறையின் மரபு படைப்பாற்றல் மற்றும் உறுதியின் கூட்டாக நான் கருதுகிறேன். மத்திய அரசிடம் இருந்து இந்த செய்தியை முதலில் பெற்ற போது இந்த கௌரவத்தால் மட்டுமல்ல, நமது திரைப்பட மரபின் குரலை முன்னெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கியத்தால் மிகவும் நெகிழ்ந்தேன்.
இது விதியின் மென்மையான கரம் என்று நம்புகிறேன். மலையாள திரைப்படத்தை அதன் பார்வை மற்றும் கலைத்திறனால் வடிவமைத்த அனைவரின் சார்பாக இந்த விருதை ஏற்க என்னை அனுமதிக்கிறது. உண்மையைச் சொல்வதென்றால் இந்த தருணத்தை நான் ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று நடிகர் மோகன்லால் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் பார்க்கிங் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் எம்எஸ் பாஸ்கர் மற்றும் பார்க்கிங் படத்துக்கு 3 தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் உள்ளொழுக்கு படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஊர்வசி துணை நடிகை விருதும், வாத்தி படத்தில் சிறந்த இசையமைத்த ஜீவி பிரகாஷ் குமாரும் ஜனாதிபதி கரங்களால் தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டனர்.





