தமிழ் சினிமாவில் நட்சத்திரப் பாடகராக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆர் சிவாஜி காலம் துவங்கி ரஜினி கமல்ஹாசன் என பாடி விஜய் சூர்யா அஜீத் போன்றவர்களுக்கும் பாடிய 3 தலைமுறைகள் கண்ட பாடகர். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர்.
பாடகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராக இசையமைப்பாளராக நடிகராக தயாரிப்பாளராக பன்முக தன்மைகளுடன் விளங்கியவர். தனது குரல் வளமையால் அபார பாடல் திறமையால் ஏராளமான மத்திய மாநில அரசு விருதுகளை வென்றவர். கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இதே நாளில் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார்.
அவர் தமிழ் திரையுலருக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையிலும் அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாகவும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்பி பாலசுப்பிரமணியம் சாலை என தமிழக அரசால் சமீபத்தில் பெயர் சூட்டப்பட்டு அறிவிப்பு பலகை திறந்து வைக்கப்பட்டது.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் நினைவு தினமான இன்று திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் வைரமுத்து கூறியிருப்பதாவது, பாசமுள்ள பாட்டுக்காரா, நினைவு நாளில் அல்ல உன்னை நினைக்காத நாளில்லை. நீ பாடும்போது உடனிருந்த நாட்கள் வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்.
பொன்மாலை பொழுது உன் குரலின் அழகியல் வசீகரம், சங்கீத ஜாதி முல்லை கண்ணீரின் திருவிழா, காதல் ரோஜாவே கவிதை கதறல், வண்ணம் கொண்ட வெண்ணிலவே காதலின் அத்வைதம், பனி விழும் மலர்வணம் சிருங்கார சிற்பம், என் காதலே தோல்வியின் கொண்டாட்டம்.
ஒவ்வொரு பாட்டிலும் உனக்குள் இருந்த நடிகனை கரைத்து குழைத்துப் பூசி இருப்பாய். உன் வரவால் திரைப்பாடல் பூச்சூடி நின்றது, உன் மறைவால் வெள்ளாடை வெள்ளாடை சூடி நிற்கிறது என்று கவிஞர் வைரமுத்து அந்தப் பதிவில் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். தற்போது கவிஞர் வைரமுத்துவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.





