நடிகர் விஜய் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு அவர் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. தெலுங்கில் 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்றும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் அதே நேரத்தில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டவும் விஜய் முடிவு செய்திருக்கிறார்.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகும் அதே வேளையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக சினிமாவுக்குள் வந்திருக்கிறார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தற்போது டைரக்ட் செய்து வருகிறார். அப்பா நடிகராக விட்டுச் செல்லும் இடத்தை மகன் இயக்குனராக நிரப்புவார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான படம் நண்பன். இந்த படத்தின் விழா ஒன்றில் நடிகர் விஜய் பங்கேற்றார். அப்போது நடிகர்கள் ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் விஜய்க்கு அருகில் விழா மேடையில் நின்றிருந்தனர். அப்போது நண்பன் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் விஜய் வெளிப்படையாக சில விஷங்களை பேசினார்.
அப்போது நடிகர் விஜய் கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட் எப்பவும் கலகலன்னு இருக்கறதுக்கு காரணம் ஜீவா தான். ஏதாவது ஒண்ணை சொல்லி எல்லோரையும் ஜீவா சிரிக்க வைத்து விடுவார்..இதில் என்னை சிரிப்பு மூட்டி மாட்டி விட்டு இந்த வேலை எல்லாம் ஜீவா செய்வார்.
முக்கியமான எமோஷனலான சீன்கள் பண்ணிட்டு இருப்போம். அப்போ கரெக்டா டேக்குக்கு முன்னாடி ஏதாவது ஒண்ணை பேசி சிரிக்க வெச்சுட்டு ஜீவா அந்த மூடுக்கு போயிடுவார். எனக்கு இருக்கிற ஒரு கெட்ட பழக்கம் என்னால சிரிப்பை அடக்க முடியாது. மூஞ்சிக்கு முன்னாடி சிரிச்சுடுவேன். அப்படி என்னை டைரக்டர் கிட்ட மாட்டிவிடுகிற ஒரு கேரக்டர் ஜீவா என்று அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.





