தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நேற்று இரவு கரூரில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 9 குழந்தைகள் 17 பெண்கள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ. 20 லட்சம் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
அத்துடன் முன்னதாக நேற்றிரவு தமிழக அரசு நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1லட்சம் என நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவே சென்னையில் இருந்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு இன்று காலை சென்னை திரும்பினார்.
இந்த விவகாரத்தில் இப்போது தவெக மாநில பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் மீது கரூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், நடந்த சம்பவம் குறித்து விசாரணை கமிஷன் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற தகவல்களை இப்போது நான் கூற முடியாது என விஜய் மீது கைது நடவடிக்கை பாயுமா என்பது குறித்த கேள்விக்கும் சூசகமாகவும் பதில் அளித்தார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் அடுத்த வாரம் அக்டோபர் 5ம் தேதி வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்வதாக இருந்த மக்கள் சந்திப்பு பிரசார கூட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால் இனி நடிகர் விஜய்க்கு எந்த ஒரு மாவட்டத்திலும் பிரசார பயணம் செய்ய அரசு மற்றும் போலீஸ் தரப்பில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதே பரவலான கருத்தாக இருந்து வருகிறது.
இந்த விவாகரத்தை பொருத்த வரை நடந்த துயர சம்பவத்துக்கு ஒரு தரப்பு திமுக அரசும் மற்றொரு தரப்பு தவெக தலைவர் விஜய் மீதும் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சீமான் போன்றவர்கள் நடந்தது விபத்து, இதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியாது என்கிற வகையில் ஒரு பதிலை சொல்லி இருக்கிறார். மத்திய அரசு நடந்த சம்பவம் குறித்து தமிழக அரசிடம் விசாரணை அறிக்கை கேட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அளிக்கும் அறிக்கை அடிப்படையில்தான் திமுக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





