நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர் ஜனநாயகன் படத்துக்கு பின் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறிவிட்டார். ஆனால் இந்த உறுதி வருகிற 2026 சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு மாறவும் வாய்ப்புள்ளது. சில ஆண்டுகளுக்கு ஒரு படம் என்ற முடிவுக்கு கூட அவர் மாறலாம்.
கடந்த ஆண்டில் தவெக கட்சி ஆரம்பித்தது போல் நடிகர் விஜய் தமிழ்நாட்டில் பரபரப்பான ஒரு அரசியல் தலைவராக இருந்து வருகிறார். குறிப்பாக விக்கிரவாண்டி மாநாடு மதுரை மாநாடு ஆகியவற்றை தொடர்ந்து அவர் வாரந்தோறும் மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வரும் நிலையில் அவரது பேச்சு இன்னும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கடந்த சனிக்கிழமை இரவு கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி வாரந்தோறும் விஜய் மக்களை சந்திக்க வருவாரா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த வழக்கில் திமுக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதும் மக்கள் மத்தியில் பரபரப்பை தந்துள்ளது.
இந்த சூழலில் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் பங்களா உள்ளது. அதே போல் பனையூரிலும் பங்களா உள்ளது. இதுதான் தவெக கட்சியின் மாநில தலைமை அலுவலகமாகவும் உள்ளது. கட்சி கூட்டங்கள் கட்சி நிகழ்ச்சிகள் பலவும் இங்குதான் நடத்தப்படுகின்றன. இதுதவிர பட்டினப்பாக்கம் சாலிகிராமம் போன்ற இடங்களிலும் நடிகர் விஜய்க்கு வீடுகள் உள்ளன.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சாலிகிராமம் பகுதியில் உள்ள வீட்டில் தினமும் 12 மணி – 12 30 மணி என மதிய வேளைகளில் யார் சென்றாலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த அன்னதான திட்டம் பல நாட்களாக நடந்து வருகிறது. நடிகர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தனது சொந்த செலவில் இந்த தினசரி மதியம் அன்னதான திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
தனது மகன் புதிய கட்சி துவங்கி அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். அவரது லட்சியம் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக வேண்டுதல் வைத்து இந்த தினசரி அன்னதான திட்டத்தை எஸ்ஏ சந்திரசேகர் நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் உள்ளது. ஆனால் எந்த காரணமாக இருந்தாலும் தினமும் மதியம் பசித்த வயிறுகளுக்கு பசியாற அன்னதானம் தரும் அவரது உயர்ந்த குணத்தை பலரும் பாராட்டவே செய்கின்றனர்.





