நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோ, இல்லையா ஆனால் சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சை கிளப்பியிருக்கிறது. அதாவது விஜய் நடிப்பதை நிறுத்தாமல் இருந்தால், எப்படியும் ஆண்டுக்கு குறைந்த பட்சத்தில் 2 அல்லது 3 படங்கள் நடிப்பார். அதில் இருந்து 500 கோடி ரூபாய் வரை தயாரிப்பு செலவுகள் ஏற்படும். பல நூறு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த கோணத்தில் பார்த்தால், விஜய் நடிப்பதை நிறுத்திவிடும் பட்சத்தில் இப்படி நூற்றுக்கணக்கான கோடிகளில் விஜய் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வேறு மொழி நடிகர்களை தேடிச் செல்வர். இயக்குநர்களும் அப்படி செல்ல வாய்ப்புள்ளது என்றும் பேசப்படுகிறது. ஒருவிதத்தில் சினிமா தயாரிப்பில் விஜயை மையமாக வைத்து நடந்து வந்த வியாபாரம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது ஒரு விதத்தில் ஏற்றுக்கொள்ளும் விஷயமாக இருக்கிறது. விஜய் இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ. 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரை வைத்து ஆயிரம் கோடி ரூபாய் வரை வைத்து பிஸினஸ் செய்ய கார்பரேட் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.
இந்த சூழலில் அவர் இப்போது நடித்து வரும் படத்துடன் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாக கூறியிருக்கிறார். அந்த படத்தை இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், அட்லி, கார்த்திக் சுப்பராஜ், கௌதம் மேனன் இப்படி சிலரில் ஒருவர் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதில் சில தெலுங்கு பட இயக்குநர்களின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் இதில் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை என்பதுதான் இன்றைய உண்மை.
இந்நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் முக்கிய தயாரிப்பாளராக உள்ள தனஞ்செயன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, விஜய் அவரது 69வது படத்துடன் நடிப்பதை நிறுத்தி விட போகிறார் என்பது எல்லாம் உண்மை இல்லை. அவர் நடிப்பதில் கொஞ்ச காலம், அதாவது சில ஆண்டுகள் பிரேக் எடுத்து இடைவெளி விடப் போகிறார். அதுதான் நடக்கப் போகிறது.
அதனால் விஜயை, ரசிகர்கள் பெரியதாக மிஸ் பண்ண போவதில்லை. 2025ம் ஆண்டில் அவரது 69வது படம் ரிலீஸ் ஆன பிறகு, சட்டசபை தேர்தல் பணிகளை கவனிப்பார். அரசியலில் அவர் நினைத்ததை அடைந்தால், மக்கள் பணிகளை கவனித்து செய்து முடிப்பார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிடுவார், என்று கூறியிருக்கிறார் தனஞ்செயன். அதாவது தேர்தலில் வெற்றி என்றால், அரசியலில் விஜய் நீடிப்பார். இல்லை எனில் மீண்டும் சினிமாவுக்கே திரும்பி விடுவார் என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.





