நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து அவரே இயக்கிய படம் காந்தாரா. கன்னட மொழியில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என மற்ற மொழிகளிலும் வெளியாகி அபார வெற்றியை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.
இதைத் தொடர்ந்து தற்போது ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் காந்தாரா சாப்டர் 1 படத்தை தயாரித்துள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி ஹீரோவாக நடித்து படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தில் 800ம் ஆண்டுகளில் நடந்த கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று காந்தாரா சாப்டர் 1 படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. பல்வேறு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படத்தில் மதராஸி பட நாயகி ருக்மணி வசந்த் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழில் வெளியாகும் படத்துக்கு நடிகர் மணிகண்டன் நாயகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காந்தாரா சாப்டர் 1 படம் பார்க்க வருபவர்கள் மது அருந்தியிருக்க கூடாது. குறிப்பாக அசைவம் சாப்பிட்டு இருக்க கூடாது. மேலும் புகை பிடிக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதுகுறித்து உடனடியாக காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி மறுப்பு தெரிவித்து இருந்தார். எங்களுக்கும் இந்த அறிவிப்பை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு தனி மனிதனின் உணவு விஷயத்தில் யாரும் தலையிட உரிமை இல்லை. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது யாரோ பரப்பிவிட்ட தவறான வதந்தி என்று விளக்கம் தந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஒரு லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு 250 நாட்களுக்கு மேல் நடந்துள்ளது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டுள்ளது. யாருக்கும் அசைவம் சாப்பிட அனுமதி இல்லை. இது கடவுளை மையப்படுத்திய பக்தி படம் என்பதால் அப்படி ஒரு உணவு கட்டுப்பாடுடன் பக்தியுடன் இந்த படப்பிடிப்பை படக்குழு நடத்தி முடித்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடாக தான் இப்படி ஒரு தகவலை யாரோ சிலர் பரப்பி விட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.





