தமிழ் சினிமாவில், கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தமிழ் படங்கள் 100க்கும் மேற்பட்டவை ரிலீஸ் ஆகியும் எந்த படமுமே பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. ரஜினி நடித்த லால் சலாம், சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் என பல படங்கள், ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தன.
இந்த காலகட்டத்தில் வெளியான மலையாள படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. குறிப்பாக மஞ்சும்மெல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு, ஆடுஜீவிதம், ஆவேசம் ஆகிய படங்கள் அபார வெற்றியை பெற்றன, இதில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ், 225 கோடிக்கு மேல் வசூலித்தது. பிரேமலு 135 கோடி ரூபாயை கடந்தது. ஆவேசம் ரூ. 150 கோடியை தாண்டியது.
தமிழ் படங்கள் எதுவுமே பெரிய வெற்றி பெறாத நிலையில், தொடர்ந்து மலையாள படங்களின் மாஸ் ஹிட் படங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூழலில் கடந்த மாதம் வெளியான கில்லி படம், பெரிய வரவேற்பை தியேட்டர்களில் பெற்றது. 2004ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 20 ஆண்டுகளுக்கு பின் ரி ரிலீஸ் செய்யப்பட்டு, 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையை படைத்தது.
இந்நிலையில் தான் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம், கடந்த 3ம் தேதி வெளியானது. முதல் 3 பாகங்களாக அரண்மனை படம் வெளியான நிலையில், 4வது பாகமாக வெளியான இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடித்திருந்தார். தமன்னா, ராசிக்கண்ணா உள்ளிட்டோர் நடித்த இந்த படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதேபோல் கடந்த 10ம் தேதி, இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் படம் வெளியானது. இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே, டீசர் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பலத்த கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே டாடா, லிப்ட் படங்களை கொடுத்த கவின், இந்த படத்தில் வேற லெவலில் நடித்திருந்தார். இந்த படமும் ரசிகர்களின் கவனம் பெற்ற படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து அரண்மனை 4, ஸ்டார் படங்களின் வசூல் நிலவரங்கள் இப்போது வெளிவந்துள்ளது. அதன்படி கடந்த 10ம் தேதி வெளியான கவின் நடித்த ஸ்டார் படம், 7 நாட்களில் ரூ. 18.80 கோடி வசூலித்துள்ளது. கடந்த 3ம் தேதி ரிலீசான அரண்மனை 4 படம், 10 நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடி வசூலை கடந்தது. 14 நாட்களில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 51 கோடி வசூலை எட்டியது. பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் ரூ. 22.5 கோடி என மொத்தம் உலகளவில் 73.5 கோடி வசூலை கடந்துள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





