கடந்த 1995ம் ஆண்டில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான தேவா படத்தில் விஜய் சுவாதி சிவக்குமார் மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து வசந்த வாசல் செல்வா போன்ற படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை சுவாதி நடித்திருந்தார். நடிகர் அஜீத்குமாருடன் வான்மதி படத்திலும் நடித்தார்.சொக்கத்தங்கம் படத்தில் பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்திருந்தார். தற்போது டிவி சீரியல்களில் சுவாதி நடித்து வருகிறார். பாரிஜாதம் சீரியலில் அவரது நடிப்பு அதிக கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சுவாதி கூறியதாவது, நான் 8வது 9வது வகுப்பு படிக்கும் போதே மாடலிங் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை பார்த்த எஸ்ஏ சந்திரசேகர் எங்கள் வீட்டுக்கு போன் செய்தார். அப்போது போனை எடுத்துப் பேசிய என் அம்மா சுவாதியை படத்தில் நடிக்க வைக்க விருப்பமில்லை என்று சொல்லி போனை துண்டித்து விட்டார். ஆனால் எஸ்ஏசி சார் ஆபீசிலிருந்து தொடர்ந்து போன் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.
அதனால் நானும் அம்மாவும் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தோம். எஸ்ஏ சந்திரசேகர் வீட்டில் போட்டோஷூட் நடந்தது. அப்போது ஒருவர் பின்னால் வந்து என்மீது கை வைத்தார். திருப்பிப் பார்த்தபோது அது எஸ்ஏ சி மகன் விஜய் எனத் தெரிந்தது. அந்த போட்டோஷூட் முடிந்ததும் நீங்க தான் இந்த படத்தின் ஹீரோயின் என்று கூறிவிட்டனர். ஆரம்பத்தில் மற்றொரு முன்னணி நடிகை தேவா படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் பள்ளி விடுமுறை காரணமாக எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. தேவா படப்பிடிப்பில் ஒரு காட்சி எடுக்கப்பட்டது. கதைப்படி எனக்கு தந்தையாக நடித்த சிவக்குமார் என்னை அறைந்து நான் அழ வேண்டும். ஆனால் சிவக்குமார் உண்மையாக அடிக்காமல் லேசாக அடித்ததால் எனக்கு அழுகை வரவில்லை. கண்ணீரும் வரவில்லை. பலமுறை டேக் எடுத்தும் அழுகை வராததால் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கோபமாகி விட்டார்.
நேராக என்னிடம் வந்த அவர் என் கன்னத்தில் வேகமாக ஓங்கி அறைந்தார். வலியால் நான் அழுதுவிட்டேன். அந்த காட்சி உடனே ஓகே ஆனது. அந்த அடியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் எஸ்ஏசி விரல் ரேகை கன்னத்தில் பதிந்து விட்டது. பள்ளி மாணவியாக இருந்த நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் முன்னால் அடிபட்டதால் பெரிய அவமானமாக இருந்தது. அதனால் ரொம்பவும் அமைதியாக இருந்தேன்.
இதை கவனித்த விஜயின் அம்மா ஷோபா சுந்தரசேகர், சின்னப்பொண்ணு புதுப் பொண்ணு அதை போய் இப்படி அடிச்சிட்டீங்களே என்று எஸ்ஏசியிடம் டென்ஷனாக பேசினார். பின்னர் எஸ்ஏசி வந்து என்னை சமாதானம் செய்தார். எஸ்ஏசி சாருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி கோபம் வரும் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பள்ளி மாணவியாக இருந்ததால் அந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாததாகி விட்டது என்று அந்த நேர்காணலில் நடிகை சுவாதி கூறியிருக்கிறார்.





