தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். வெறும் மூன்றே மூன்று திரைப்படங்கள் மட்டும் கொடுத்திருக்கும் அவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் மிகப்பெரிய அளவு உயர்ந்து இருக்கிறது. சொல்லப்போனால் அவரின் திரைப்படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு மிக முக்கிய காரணம் கடந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான டிராகன் திரைப்படம்தான். அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். வாழ்க்கையில் இளைஞர்களுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை, நகைச்சுவை கலந்த சென்டிமெண்ட் காவியமாக எடுத்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் கிளிக்கான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அது மட்டுமல்ல குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதன் காரணமாகவே பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படங்களுக்கு தமிழ் சினிமா திரையுலகில் கடும் கிராக்கி எழுந்துள்ளது.
இதில் பலரும் எதிர்பார்த்து இருந்த டியூட் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. பிரேமலு மலையாள திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மமீதா பைஜூ இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சரத்குமாருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுதா கொங்கராவிடம் உதவியாளராக இருந்த கீர்த்தீஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
சாய் அபயங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில், டியூட் திரைப்படத்திலிருந்து வெளியான ஊறும் பிளட் பாடல் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. இதனைத் தொடர்ந்து படத்தில் இருந்து அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகி விட்டன. இந்த நிலையில் டியூட் திரைப்படம் குறித்து இயக்குனர் கீர்த்தீஸ்வரன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில்,
30 வயது ரஜினியை மனதில் வைத்துதான் இந்த திரைப்படத்தை நான் எடுத்து இருக்கிறேன். பிரதீப் ரங்கநாதன் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். காதல் மற்றும் மாஸ் காட்சிகள் இணைந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் ஸ்ரீதேவி ஜோடியின் சாயலை போன்றே இதில் பிரதீப் ரங்கநாதன் – மமீதா பைஜூ ஜோடி இருக்கும். பிரேமலு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே இதில் நடிக்க மமீதா ஒப்பந்தமாகிவிட்டார். படத்தில் விழா ஏற்பாட்டுக் குழுவை நடத்தும் நபர்களாக இருவரும் நடித்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.





