நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்துக்கு பிறகு இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். மோகன்லால் சிவராஜ்குமார் பாலய்யா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இது அவரது 173வது படமாகும். இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். அவர் சொன்ன கதையை ரஜினி ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க கமிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் வருகிற 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ரஜினி பிறந்த நாள் என்பதே அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல்தான். அந்த நாள் தீபாவளி பொங்கல் போன்ற ஒரு பண்டிகை நாளாக தான் இருக்கும். அதுவும் அவரது 50வது சினிமா நிறைவு ஆண்டில் இந்த 75வது பிறந்த நாள் என்பது இன்னும் விசேஷமானதாக உள்ளது.
ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவர் நடித்த பழைய படங்கள் அதுவும் சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம்தான். ஏனெனில் இந்த முறை ரஜினி பிறந்த நாளில் அவர் நடித்த புதிய படம் எதுவும் ரிலீஸாக வாய்ப்பில்லை. அதனால் இந்த முறை ரஜினிகாந்தே அந்த படத்தை ரிலீஸ் செய்யுங்க என்று உத்தரவு போல் கூறியிருப்பதாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படம் படையப்பா. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருந்தார். கடைசியாக அவர் நடித்த படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன் பெரிய அளவில் பாராட்டப்பட்டார். படையப்பா படத்தை ரஜினி சொந்தமாக தயாரித்தார். அப்போது அவருடன் இணை தயாரிப்பாளராக இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டவர் பிஎல் தேனப்பன்.
சமீபத்தில் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பனை அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், வரும் 12ம் தேதி என்னுடைய பிறந்த நாளில் படையப்பா படத்தை ரி ரிலீஸ் செய்யுங்கள் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். இப்போதைய நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் வருகிற 12ம் தேதி மீண்டும் திரைக்கு படையப்பா படம் வர உள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். மேலும் லட்சுமி மணிவண்ணன் ராதாரவி செந்தில் நிழல்கள் ரவி சித்தாரா அப்பாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.





