தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. கடந்த 1999ம் ஆண்டில் இவரது இயக்கத்தில் முதன்முறையாக வெளியான படம் சேது. விக்ரம் அபிதா ஸ்ரீமன் சிவக்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இன்று வரை சேது படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சேது படத்தை தொடர்ந்து நந்தா அவன் இவன் நான் கடவுள் பிதாமகன் பரதேசி தாரை தப்பட்டை ஆகிய படங்களை இயக்கிய பாலா, 25 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். ஆனால் இன்னும் 10 படங்கள் கூட அவரது இயக்கத்தில் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு வணங்கான் 8 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது.
நடிகர்கள் விக்ரம் சூர்யா ஆர்யா விஷால் அதர்வா சசிக்குமார் போன்ற ஹீரோக்களுக்கு தனி அடையாளம் பெற்றுத் தந்தவை இயக்குனர் பாலா படங்கள் என்றால் அது மிகையல்ல. இதில் நான் கடவுள் பரதேசி ஆகிய 2 படங்கள் கமர்ஷியல் கடந்த உணர்வுபூர்வமான படங்களாக பாலாவுக்கு இருந்தன.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த வணங்கான் படம், படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் அவர் வெளியேறி விட்டதால், அந்த கேரக்டரில் அருண் விஜய் நடித்து, வரும் 10ம் தேதி வணங்கான் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோசனுக்காக இயக்குனர் பாலா, நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.
வழக்கமாக ஒரு திரைப்படம் என்றால் ஆரம்பித்து முன்னோக்கி செல்லும். இறுதியில் படத்தின் முடிவு கிளைமாக்ஸ் ஆக அமைகிறது. இப்படிதான் இயக்குனர்கள் கதை திரைக்கதை உருவாக்குகிறார்கள். அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைக்கின்றனர். ஆனால் இதில் முற்றிலும் இயக்குனர் பாலா வித்யாசப்படுகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பாலா கூறியதாவது, நான் முதலில் படத்தின் கிளைமேக்ஸை முடிவு பண்ணிடுவேன். அதுக்கு அப்புறம்தான் அந்த கிளைமேக்ஸ்க்கு தகுந்த மாதிரி ஒரு கதை செய்வேன். இதுதான் முடிவு, இதுக்கேத்தபடி தான் ஒரு கதை பண்ணுவேன். வணங்கான் படமும் அப்படிதான். என்னுடைய கதை இப்படி பின்னோக்கி தான் உருவாகும். அதுதான் எனக்கும் ஈஸியா இருக்கும் என்று இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.





