மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் திலீப். இவர் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். இவர் மலையாள நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
இந்நிலையில் நடிகை காவ்யா மாதவனுடன் நடிகர் திலீப்புக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதனால் தனது மனைவி மஞ்சுவாரியரை ஏமாற்றிவிட்டு காவ்யா மாதவனுடன் திலீப் நெருக்கமாக பழகி வந்தார். மஞ்சுவாரியரும் காவ்யா மாதவனும் நெருங்கிய தோழிகளாகவும் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இவர்களது தவறான நெருக்கமான பழக்கம் குறித்து நடிகை மஞ்சுவாரியரின் தோழி நடிகை பாவனா கூறியிருக்கிறார். இவர் காவ்யா மாதவனுக்கும் தோழிதான். எனினும் அவர் மஞ்சுவாரியருக்கு துரோகம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழில் பாவனா தீபாவளி வெயில் சித்திரம் பேசுதடி ஆர்யா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அத்தாணி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டில் நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. அந்த கும்பல் காருக்குள் அவரை பாலியல் துன்புறுத்தியது. இது மலையாள சினிமா துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின்படி மலையாள நடிகர் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இருந்த முன்விரோதம் காரணமாகவே சதிதிட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரிய வந்தது.இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர் என்று நடிகர் திலீப் ஏற்கனவே கூறியிருக்கிறார். இந்நிலையில் நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில் நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இது கேரளா சினிமாத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





