கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அத்தாணி பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த ஒரு கும்பல் கேரவனை வழிமறித்து தடுத்து நிறுத்தி அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நடிகை பாவனாவை பாலியல் துன்புறுத்தால் செய்தது. காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அங்கமாலி போலீசார் விசாரணை நடத்தினர். பிரபல மலையாள நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 8 ஆண்டுகளாக எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கிலிருந்து நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்த நிலையில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அவர்களுக்கான தண்டனை விபரம் கோர்ட்டில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டது குறித்து எதிரான கருத்துகள் இருந்து வருகின்றன. கேரள நடிகைகள் கூட்டமைப்பு நடிகர் திலீப்புக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆலுவாவில் உள்ள தனது வீட்டில் நடிகர் திலீப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் கேரள முதலமைச்சரை சிறப்பு புலனாய்வு குழு தவறாக வழி நடத்தி அவருக்கு தவறான தகவல்களை தந்துள்ளது. ஒரு கட்டத்தில் 6 பேரை கைது செய்த பின்னர் இந்த வழக்கில் வேறு யாரும் கூட்டு சதியில் ஈடுபடவில்லை என்று முதல்வரே கூறியிருந்தார்.
அதற்கு பின்னரும் முதலமைச்சரிடம் சில அதிகாரிகள் தவறான தகவல்களை தெரிவித்து தவறாக வழிநடத்திச் சென்றனர். விசாரணை அதிகாரிகள் தங்கள் சுய லாபத்திற்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு நகல் கிடைத்த பின்னர் இது குறித்து தொடர் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். எனது குடும்பப்பாங்கான திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களை அகற்ற முயன்று சிலர் கூட்டு சதி செய்தனர். இந்த கூட்டு சதிக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறேன்.
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பிவிட்டு சமூகத்தின் கவனத்தை எனக்கு எதிராக திருப்பி விடுகின்றனர். என் மீதான மக்களின் அன்பையும் ஆதரவையும் சீர்குலைத்து அதனை விரோதமாக மாற்றும் முயற்சியில் சதிகாரர்கள் வெற்றி கண்டு விட்டார்கள். எனக்கு எதிராக கூட்டு சதி நடந்து இருப்பதாக சந்தேகம் உள்ளது. அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகர் திலீப் கூறியிருக்கிறார். இது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





