நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் துவங்கினார். வருகிற செப்டம்பர் மாதம் 22ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்த ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையிலும், அவர்களுக்கு கமகம பிரியாணி விருந்து பரிமாறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை அறிமுகப்படுத்தி கொடியேற்றினார். கட்சி பாடலையும் வெளியிட்டார். இந்த விழாவில் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் பேசிய விஜய், விரைவில் அரசியல் மாநாடு அறிவிப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், தனியார் சேனல் ஒன்றில் பேசிய நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் கூறியதாவது, என் மகன் விஜய், தமிழக மக்களுக்காக தொடங்கிய கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய விழா, எனது மனதில் புது ஒளி பட்டொளி வீசி பறக்கிறது. பரவசம் அடைந்தேன். விஜய் எதையும் அமைதியாக உள்வாங்கி, ஆர்ப்பரிப்பு இல்லாமல் ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த தெரிந்த பிள்ளை. அமைதியில் அவர் ஒரு கடல்.
தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற வள்ளுவன் வாக்கை ஏற்கனவே விஜய் எனக்கு பெற்றுத் தந்திருக்கிறார். பெயரிலேயே வெற்றிக்கொண்ட நீ, கட்சியிலும் வெற்றியை பெயராக வைத்துள்ளாய். திரையில் உன் முகம் பார்த்து உயர்த்தி மக்களுக்கு தரையில் நடந்து வந்து ஏதேனும் செய். எல்லாமும் செய். பசித்தோர் முகம் பார். மக்களை தேடிச்சென்று நேரில் சந்தி. அவர்களின் குறைகளை காது கொடுத்து கேள். அவர்களில் ஒருவனாக மாறிவிடு.
தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்று. கண்ணியம் காப்பாற்று, ஈட்டிய செல்வம் தந்த மக்களுக்கு புரட்சிக்கர திட்டங்களை தீட்டு, உன் அரசியல் பயணம் பணம் தாண்டிய லட்சிய பயணம் என்பதை ஊரே பாராட்டும் போது உள்ளம் நெகிழ்கிறேன். கயிற்றில் ஏறி கம்பத்தில் உயர்ந்து காற்றில் விரிந்து மலர்கள் பொழிந்து வானில் பறக்கும் உன் கொடி, உன் அரசியல் வெற்றிக்கு இதுவே முதல் படி.
உன் நண்பா, நண்பிகளின் நம்பிக்கை நீ, உன் கழகத்தின் முதல் தொண்டன் நீ. இப்போது போல் எப்போதும் உண்மையாக இரு. வாகை சூடு விஜய். உன்னை வாழ்த்தி தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க காத்திருக்கும் தாய்மார்களில் ஒருத்தி. ஏற்கனவே நாம் சிஎம் ( செலிபரட்டி மதர்) இனி நானும் ஒரு பிஎம ( புரவுடஸ்ட் மதர்) என்று ஷோபா சந்திரசேகர் அதில் கூறியிருக்கிறார்.





