தமிழக சினிமா வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மிகப்பெரிய வரலாற்று சம்பவமாக இருப்பது இன்று வரை எம்ஆர் ராதா எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டதுதான். இன்று வரை மக்கள் தலைவராக கொண்டாடப்படும் ஒரு தலைவரை சக நடிகர் துப்பாக்கியால் சுடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. எப்படிப்பட்ட பரபரப்பான சூழல் அப்போது இருந்திருக்கும் என்று சொல்லவே வேண்டியது இல்லை.
ஆனால் எம்ஆர் ராதா எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்ட போது அந்த துப்பாக்கியின் குண்டு அவரது தொண்டை பகுதியில் பாய்ந்திருக்கிறது. ஆனால் எம்ஜிஆர் தீவிர மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு பிழைத்துக்கொண்டார். ஆனால் அவரால் முன்பு போல பேச முடியவில்லை. அவரது குரலில் ஒரு தழுதழுப்பு நிலை வந்துவிட்டது.
எம்ஜிஆரின் தொண்டையில் பாய்ந்த துப்பாக்கி குண்டில் ஒரு சிறு பிசிறு அப்படியே தொண்டை பகுதியில் உள்ள தசையில் சிக்கிக்கொண்டதால் அதை டாக்டர்கள் எடுக்க முடியவில்லை. எனினும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அப்போது பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ராதாரவி கூறியதாவது, என் தந்தை எம்ஜிஆரை சுட்டது ஏன் என்று பலரும் பலவிதமான கருத்துகளை இப்போது வரை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் அதுகுறித்து அவர் என்னிடம் சொன்னது இதுதான். அப்பாவும் எம்.ஜி.ஆரும் நெருங்கிய நண்பர்கள்.அந்த சமயத்தில் தயாரிப்பாளர் வாசு என்பவர் பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தை எடுக்க 1 லட்சம் ரூபாய் தேவை என்று சொன்னார்.
உடனே அப்பா நான் உனக்கு பணம் தருகிறேன் என்றார். அதன்பிறகு எம்ஜிஆரின் கால்சீட்டும் வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். அது அப்பாவின் 100வது படம். அதற்காக ஆலந்தூரில் ஒரு சேட்டுகிட்ட போய் தோட்டத்து பத்திரத்தை அடமானம் வைத்து அப்பா 1 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தார். நியாயப்படி பார்த்தால் அந்த 1 லட்சம் ரூபாயை வாசுதான் என் அப்பாவிடம் கொடுக்க வேண்டும். ஆனால் எம்ஜிஆர் நான் தருகிறேன் என்று சொல்லிவிட்டார். இதுதான் என் அப்பாவுக்கும் எம்ஜிஆருக்கும் பிரச்சனை ஏற்பட காரணம்.
பணத்தை திருப்பிக் கொடுக்காமல் 4 நாட்களாக அலைய விட்டிருக்கிறார் எம்ஜிஆர். அந்த கோபத்தில் தான் எம்ஜிஆரை துப்பாக்கியால் அப்பா சுட்டுவிட்டார். இந்த வழக்கில் அப்பா 7 ஆண்டுகள் ஜெயிலில் இருந்திருக்கிறார். அது உச்சநீதிமன்றம் வரை போய் 3 ஆண்டுகளாக குறைந்தது. அந்த நேரம் ஆட்சி மாறியது. கருணாநிதி வந்ததும் அப்பா விடுதலையானார். அப்போது கருணாநிதி மட்டும் வரலைன்னா அப்பாவுக்கு ஜெயிலிலேயே கதை முடிந்திருக்கும் என்று நடிகர் ராதாரவி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





