இன்னும் 2 வாரங்களில் டிசம்பர் மாதம் நிறைவடைந்து 2026 புதிய ஆண்டு பிறக்க உள்ளது. இந்த 2025ம் ஆண்டில் இதுவரை தமிழ் சினிமாவில் 280க்கும் மேற்பட்ட படங்கள் வெளியான நிலையில் பெயர் சொல்லும் படியான வெற்றியை வரவேற்பை பெற்ற தமிழ் படங்களின் எண்ணிக்கை என்ன என்றால் அது 10 என்ற இரட்டை இலக்கத்தை கூட தொடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
கடந்த 2024ம் ஆண்டிலும் தமிழ் சினிமாவின் நிலை இப்படியே தான் இருந்தது. இதற்கிடையே முன்னணி நடிகர்களின் சம்பள உயர்வால் பலத்த நஷ்டங்களை சந்தித்த தயாரிப்பாளர்கள், ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கத்தால் வருமானத்தை இழந்த தியேட்டர் உரிமையாளர்கள், ஓடாத படங்களால் அதிக இழப்பை சந்தித்த ஓடிடி நிறுவனங்கள், ஓடிடி நிறுவனங்களால் டிஆர்பி ரேட்டிங்கை இழந்த சாட்டிலைட் நிறுவனங்கள் என பலவிதமான தேக்க நிலையை இந்த ஆண்டில் தமிழ் சினிமாவும், அதுசார்ந்த துறைகள் சந்தித்தன என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பட பூஜை போட்டு ஆரம்பிக்கும் எல்லா படங்களும், தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் ஆன பிறகே ஓடிடி ரிலீஸ் என்ற முறையை தயாரிப்பாளர்கள் பின்பற்ற வேண்டும். இந்த ஒப்பந்ததத்துக்கு சம்மதிக்கும் படங்களை மட்டுமே தியேட்டர்களில் திரையிட ஒத்துழைப்போம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதே போல் ஓடிடி நிறுவனங்களும் இப்போது தங்களது டிஜிட்டல் உரிமம் விலையை முன்பைவிட பலமடங்கு குறைத்து விட்டன. முதலில் 120 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய முன்னணி நட்சத்திர நடிகர் படத்தை இப்போது 40 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க கூட முன்வருவதில்லை. இதனால் நட்சத்திர நடிகர்களின் படங்களே ஓடிடி வியாபாரம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இனி நடிகர்கள் தங்களது சம்பளத்தை வெகுவாக குறைத்துக்கொள்ள முன்வந்தாக வேண்டும். முன்னணி நடிகர்கள் படத்தின் லாபத்தில் ஷேர் வாங்கிக்கொள்ள முன்வர வேண்டும் என்கிற முக்கிய முடிவுக்கு தயாரிப்பாளர்களும் வந்துவிட்டனர். அதனால் இனி நடிகர்கள் இந்த கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் தமிழ் சினிமா மீண்டும் உயிர்பிடித்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
அதே போல் இனி கமர்ஷியல் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரிக்காமல், கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தயாரிக்கவும் தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக திரையில் ரத்தம் கத்தி துப்பாக்கி என வன்முறையை நம்பி படம் எடுக்கும் பில்டப் இயக்குனர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கதையை நம்பும் படைப்புத்திறன் கொண்ட இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தால் தமிழ் சினிமாவில் வரும் 2026ம் ஆண்டு சிறந்த மாற்றங்களையும் அற்புதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். ரசிகர்களுக்கு நல்ல சினிமா பார்க்கும் வாய்ப்பு உருவாகும்.





