தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் களத்தில் இறங்குவது சிவாஜி கணேசன் முத்துராமன் காலத்திலேயே துவங்கி விட்டது. கடந்த 1980 90களில் நடிகர் சிவாஜி கணேசன் மகன் இளைய திலகம் பிரபு, நடிகர் முத்துராமன் மகன் நவரச நாயகன் கார்த்திக் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு இப்போது சிபிராஜ் கௌதம் கார்த்திக் அதர்வா விக்ரம் பிரபு வரிசையில் கேப்டன் மகன் சண்முக பாண்டியனும் தமிழ் சினிமா களத்தில் நிற்கிறார். நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் தனது அப்பாவை போலவே சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திர நடிகராக வரும் ஆசையில் சினிமாவில் நடித்து வருகிறார்.
மதுரை வீரன் சகாப்தம் படை தலைவன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது நடிகர் சண்முகபாண்டியன் நடிப்பில் கொம்பு சீவி என்கிற படம் நாளை வெளியாக உள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த ராணியின் மகள் தார்னிகா இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் சீமராஜா ரஜினி முருகன் எம்ஜிஆர் மகன் டிஎஸ்பி உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம், கொம்பு சீவி படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ஒரு திரைக்கதை களத்தில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முதன்முறையாக கேப்டன் மகன் சண்முகபாண்டியனுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ளார்.
கொம்பு சீவி படத்தை தொடர்ந்து நடிகர் சண்முகபாண்டியன் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த லேட்டஸட் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் புதிய படத்தில் சண்முக பாண்டியன் நடிக்க உள்ளதாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவரது அம்மா, தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் யாரடி நீ மோகினி குட்டி உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர்தான் மித்ரன் ஆர் ஜவஹர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் அனைத்துமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படங்களாக உள்ளன. இப்போது தனுஷ் பட இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர், நடிகர் சண்முகபாண்டியனுடன் அடுத்த படத்தில் கைகோர்க்கிறார்.





