நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் நரேன் பிரியாமணி பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் தெலுங்கில் உருவான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்றும் பாலய்யா நடித்த கேரக்டரில் தான் விஜய் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் இது விஜயின் கடைசி படம். இந்த படத்துடன் அவர் சினிமாவை விட்டு விலகி விடுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
மேலும் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி விஜய் நடித்த தி கோட் படத்துக்கு பிறகு 16 மாதங்களுக்கு பிறகு ஜனநாயகன் படம் வெளியாகிறது. அதனால் அரசியல் கட்சித் தலைவராக விஜய் மாறிய பிறகு வரும் அவரது கடைசி படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 27ம் தேதி அதாவது நாளை மறுதினம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் உட்பட படத்தின் பணிசெய்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் அவர்களது குடும்பங்கள் என மொத்தம் 250 பேர் இந்த விழாவில் கலந்துக்கொள்ள விமானத்தில் மலேசியா செல்கின்றனர்.
அவர்களுக்கு முதல் தர தங்குமிடம் உணவு என அனைத்து வசதிகளும் மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் நடக்க உள்ள ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்காக மொத்தம் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விழாவில் நடிகர் விஜய் அரசியல் கருத்துகள் எதுவும் பேசக்கூடாது என மலேசியா போலீஸ் தடை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.





