நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வௌியீட்டு விழா தளபதி கச்சேரி என்ற டைட்டிலில் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. 85 ஆயிரம் பார்வையாளர்கள் இடவசதி கொண்ட புக்கித் ஜலீல் ஸ்டேடியத்தில் இந்த விழா மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் விஜய் நடித்த படங்களின் பாடல்கள் அடங்கிய இசை கச்சேரி மற்றும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா என 2 பகுதிகளாக இந்த விழா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடிகர் ரியோ தொகுத்து வழங்க உள்ளார்.
நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா திட்டமிடப்பட்டு கடைசி நேரத்தில் அந்த விழா ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம் ஆளுங்கட்சி திமுகவின் அழுத்தம்தான் என்று கூறப்பட்டது. அதன்பிறகு தி கோட் இசை வெளியீடு விழா வேண்டாம் என்று விஜயே தவிர்த்து விட்டார்.
ஆனால் இப்போது எச் வினோத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஜனநாயகன் படம் அவரது கடைசி படம் என்பதால் இந்த படத்துக்கான இசை வெளியீட்டு விழாவை நிச்சயமாக நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் சினிமாவை விட்டு செல்லும் விஜய்க்கு இது ஒரு வழியனுப்பு விழாவாகவும் நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் இயக்குனர்கள் நெல்சன் திலீப்குமார் அட்லி லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். கடைசி நேரத்தில் நடிகர் அஜீத்குமார் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விழாவை நேரில் காண மலேசியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் விழா திடல் பகுதியில் திரண்டு வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் புக்கித் ஜலீல் ஸ்டேடியம் அமைந்துள்ள மலேசியா ரோட்டில் ரசிகர்கள் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் நீடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மலேசியாவில் தேர்தலில் நின்றால் கூட தளபதி ஜெயிச்சிடுவார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





