நடிகர் ஷாருக்கான் இந்தியில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர். அவர் நடித்த பதான் ஜவான் போன்ற இந்தி படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தவை. அதில் ஜவான் படம் இயக்குனர் அட்லி இயக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் மொத்தம் 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உயிரே என்ற படத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்திருந்தார். கடந்த 1990களில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் ஹேராம் படத்திலும் ஷாருக்கான் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
சமீபகாலமாக தமிழில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பிற மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்களை கேமியோ ரோலில் நடிக்க செய்கின்றனர். அந்த வகையில் ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆனால் இதற்கு முன்பு ஜெயிலர் படத்தில் நடிக்க இயக்குனர் நெல்சன் அழைத்த போது ஷாருக்கான் வர மறுத்துவிட்டார். அடுத்து கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைத்த போதும் நடிகர் ஷாருக்கான் மறுத்து விட்டார். இப்படி ரஜினியுடன் 2 படங்களில் நடிக்க வருமாறு அழைத்தும் ஷாருக்கான் நடிக்க மறுத்து விட்டார்.
இது ஒருவிதத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஷாருக்கான் மீதான அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் கமலுடன் ஹேராம் படத்தில் நடித்தவர் ரஜினியுடன் நடிப்பதை கௌரவ குறைச்சலாக நினைக்கிறாரோ என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் இப்போது ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே ஜெயிலர், கூலி என 2 படங்களில் ரஜினியுடன் நடிக்க அழைத்த போதும் மறுத்து விட்டோம். இனி 3வது முறை அழைத்தும் மறுத்தால் அது நன்றாக இருக்காது. மேலும் கமலுடன் நடித்துவிட்டு ரஜினியுடனும் நடித்தால் தான் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பதால் இந்த படத்தில் ரஜினியுடன் நடிக்க ஷாருக்கான் ஓகே சொல்லியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





